Six Covenants of the Prophet in Tamil

இறைத்தூதர் முஹம்மத்

அன்றைய கிறிஸ்தவர்களுடன் செய்த

ஆறு உடன்படிக்கைகள்

முஹம்மத் பின் அப்தில்லாஹ்

நூலாசிரியரும்

ஆங்கில மொழிபெயர்ப்பாளரும்:

பேராசிரியர்

ஜோன் அன்ட்ரூ மோறோ

தமிழாக்கம்:

கலாநிதி பீ. எம். எம். இர்பான்

© John Andrew morrow, 2020

The Covenants of the Prophet Foundation

2415 Hobson Road

Fort Wayne, Indiana

United States, 46805

http://www.covenantsoftheprophet.org

http://www.johnandrewmorrow.com

You may download this work and share it with others so long as you credit the source completely. You cannot change this work in any way nor can you use it commercially.

Attribution-NonCommercial-NoDerivs CC BY-NC-ND

உள்ளடக்கம்

அத்தியாயம் 1:

இறைத்தூதர் முஹம்மத் ஸினாய் மலைத் துறவிகளுடன் செய்த உடன்படிக்கை
அத்தியாயம் 2:

இறைத்தூதர் முஹம்மத் பாரசீக கிறிஸ்தவர்களுடன் செய்த உடன்படிக்கை
அத்தியாயம் 3:

இறைத்தூதர் முஹம்மத் நஜ்ரான் கிறிஸ்தவர்களுடன் செய்த உடன்படிக்கை
அத்தியாயம் 4:

இறைத்தூதர் முஹம்மத் உலக கிறிஸ்தவர்களுடன் செய்த உடன்படிக்கை (மவுண்ட் கார்மல் கையெழுத்துப் படி)
அத்தியாயம் 5:

இறைத்தூதர் முஹம்மத் உலகக் கிறிஸ்தவர்களுடன் செய்த உடன்படிக்கை (கெய்ரோ கையெழுத்துப் படி)
அத்தியாயம் 6:

இறைத்தூதர் முஹம்மத் அஸிரிய கிறிஸ்தவர்களுடன் செய்த உடன்படிக்கை

  • இறைத்தூதர் முஹம்மத் உலக கிறிஸ்தவர்களுடன் செய்த உடன்படிக்கைகள்
  • ஒப்புதல்
  • உடன்படிக்கைகள் முன்னெடுப்பு



அத்தியாயம் 1:

இறைத்தூதர் முஹம்மத்

ஸினாய் மலைத்துறவிகளுடன் செய்த உடன்படிக்கை

[ஆக்கம்: தூதர் முஹம்மத்]


அளவற்ற கருணையும் நிகரற்ற கிருபையும் நிறைந்த அல்லாஹ்வின் பெயரால்.

[இரு அப்துல்லாஹ்வின் புதல்வரான முஹம்மதினால் அனைத்து கிறிஸ்தவர்களுக்குமாக வரையப்பட்ட உடன்படிக்கையின் கையெழுத்துப் படியின் பிரதி (அல்லாஹ்வின் சாந்தியும் அருளும் அன்னார் மீது உண்டாவதாக!)]


தூதர்கள் வந்து சென்றதன் பிறகு மனிதர்கள் அல்லாஹ்வுக்கெதிராக எந்தச் சான்றையும் முன்னிறுத்த முடியாத வகையில், அல்லாஹ்வின் படைப்புகளைப் பாதுகாக்கும் பொறுப்புடன் -நன்மாராயம் கூறுபவரும் எச்சரிப்பவருமான- அப்துல்லாஹ்வின் தூதர் முஹம்மதினால் இந்த உடன்படிக்கை வரையப்பட்டது; அல்லாஹ் சர்வ வல்லமை மிக்கவன்; ஞானம் நிறைந்தவன்.

தனது மார்க்கத்தைச் சேர்ந்தோருக்காகவும், -கிழக்கிலும் மேற்கிலும் அருகிலும் தொலைவிலும் அரபியராயும் அரபியல்லாதோராயும் தெரிந்தோராயும் தெரியாதோராயும்- கிறிஸ்தவ மதத்தைத் தழுவி வாழும் அனைவருக்காகவுமான பாதுகாப்பு சாசனமாக இதனை அவர் வரைந்திருக்கின்றார்.


எனவே, யார் இதில் வலியுறுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தை முறிக்கிறாரோ, அல்லது மீறுகிறாரோ, அல்லது அதன் கட்டளைகளுக்கு மாறு செய்கிறாரோ, அவர் அல்லாஹ்வின் உடன்படிக்கையை மீறுகிறார்; அவனது சாசனத்தை முறிக்கிறார்; அவனது மார்க்கத்தை பரிகாசம் செய்கிறார்; அவனது சாபத்துக்கு ஆளாகிறார். அவர் அதிகாரம் படைத்தவராயினும் சரி; இறை விசுவாசம் கொண்ட முஸ்லிம்களுள் ஒருவராயினும் சரி!


மலை, பள்ளத்தாக்கு, வயல், குகை, சமவெளி, பாலைவனம், தேவாலயம் முதலிய எங்கிருந்து ஒரு துறவி அல்லது யாத்திரீகர் அபயம் கோரினாலும் அவர்களின் பின்னால் நான் நிற்பேன்; நானும், எனது உதவியாளர்களும், எனது மார்க்கத்தின் அனைத்து அங்கத்தவர்களும், என்னைப் பின்பற்றும் அனைவரும் அவர்களைப் பாதுகாப்போம். ஏனெனில் அவர்கள் எனது பாதுகாப்புக்கு உட்பட்டவர்கள்; எனது குடிமக்கள்.


அவர்களது உடமைகளில் பிறர் குறுக்கீடு செய்யாமலும், (அவர்களாக விரும்பி வழங்கினாலே தவிர) அவர்கள் மீது வரி விதிக்கப்படாமலும் பாதுகாப்பேன். இந்த விவகாரங்கள் எதிலும் அவர்களுக்கெதிராக எந்தக் கட்டாயமோ கட்டுப்பாடோ ஏற்படுத்தப் படலாகாது.


ஒரு மதகுரு அவரது குருபீடத்திலிருந்தோ, ஒரு துறவி அவரது துறவு மாடத்திலிருந்தோ, ஒரு தபசி அவரது தபோவனத்திலிருந்தோ, ஒரு யாத்திரீகர் அவரது புனித யாத்திரையிலிருந்தோ அகற்றப்படலாகாது. அவர்களது தேவாலயங்களில் எதுவும் தகர்க்கப்படவோ, அவற்றிலிருந்து எந்தச் செல்வமும் முஸ்லிம்களது மஸ்ஜிதுகளை அல்லது வீடுகளை அமைப்பதற்கு பயன்படுத்தப்படவோ கூடாது. எவர் அவ்வாறு செய்கிறாரோ அவர் அல்லாஹ்வின் உடன்படிக்கையை மீறுகிறார்; அல்லாஹ்வின் தூதருடன் முரண்படுகிறார்.


துறவிகள், மதகுருக்கள், பக்தர்கள் முதலானோர் மீது தலைக்கட்டு வரியோ தண்டப்பணமோ விதிக்கப்படலாகாது. அவர்கள் தரையில் இருந்தாலும், கடலில் இருந்தாலும், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு முதலிய எந்தத் திசையில் இருந்தாலும் அவர்களை நான் பாதுகாப்பேன். அவர்கள் எனது பொறுப்புக்கும் உடன்படிக்கைக்கும் உட்பட்டவர்கள்; அனைத்துத் தீங்குகளிலிருந்தும் என்னால் பாதுகாக்கப்பட்ட வேண்டியவர்கள்.


மலைகளிலும் புனிதத் தளங்களிலும் ஒதுங்கி வாழ்வோர் தலைக்கட்டு வரியிலிருந்தும் நிலவரியிலிருந்தும் விலக்களிக்கப்படுவர். தமது சொந்தப்பாவனைக்காக அவர்கள் வளர்ப்பவற்றுக்கு தசம பாக வரியிலிருந்தும் பிற வகையான வரிகளிலிருந்தும் விலக்களிக்கப்படும். ஒரு போக பயிர் செய்கைக்கு மானியமாக ஒவ்வொரு இர்தப்’ (24 ‘ஸாஉ’) தானியத்துக்கும் ஒரு கதஹ்தானியம் அவர்களது தனிப்பட்ட பயன்பாட்டுக்கென வழங்கப்படும்.

அவர்கள் போரில் பங்கேற்க வேண்டியதில்லை; தலைக்கட்டு வரியும் செலுத்த வேண்டியதில்லை. நிலவரி செலுத்த வேண்டிய கடமைப்பாடு கொண்டவர்கள் அல்லது நிலவுடமை மூலமாகவோ வர்த்தக நடவடிக்கை மூலமாகவோ சொத்து வைத்திருப்பவர்கள் கூட பிரதி வருடமும் தலைக்கு பன்னிரண்டு திர்ஹமை விட அதிகமாக செலுத்த வேண்டியதில்லை.

எவர் மீதும் நியாயமற்ற வரி விதிக்கப்படலாகாது. நன்மைக்காகவன்றி வேதக்காரர்களுடன் எவ்வித சச்சரவும் இருத்தலாகாது [29:46]. இரக்கம் என்ற எமது இறக்கையினுள் அவர்களை அணைத்துக் கொள்ளவே நாம் விரும்புகிறோம். அவர்கள் எங்கிருந்தாலும், எங்கு தரித்தாலும் அவர்களை விட்டு குரோதம் தூர விலக்கப்படும்.


ஒரு கிறிஸ்தவப் பெண் முஸ்லிம் குடும்பம் ஒன்றினுள் நுழைந்தால், இரக்கத்தோடு வரவேற்கப்படுவாள்; அவளது தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்; அவளுக்கும் அவளது மதத்தை நேசிக்கும் மற்றொருவருக்கும் இடையில் எந்த சர்ச்சையும் இருக்கக் கூடாது. எவர் அல்லாஹ்வின் இவ்வுடன்படிக்கையை மீறி, அதற்கு எதிராக நடந்து கொள்கிறாரோ, அவர் அல்லாஹ்வினதும் அவனது தூதரரும் உடன்படிக்கைக்கு எதிராக கிளர்ச்சி செய்தவராகிறார்.

இம்மக்கள் தங்களது மதக்கட்டிடங்களையும் வசிப்பிடங்களையும் பராமரிப்பதற்கு உதவி வழங்கப்பட வேண்டும். இது அவர்களது மத விசுவாசத்திற்கு உதவுவதோடு, அவர்களை அதில் உண்மையான பற்றுக் கொள்ளவும் செய்யும்.


போருக்காக ஆயுதம் தூக்குமாறு அவர்களில் எவரும் வற்புறுத்தப்படக் கூடாது; மாறாக முஸ்லிம்களே அவர்களைப் பாதுகாக்க வேண்டும். மறுமை நாள் தோன்றி உலகம்முடிவுக்கு வரும் வரை பாதுகாப்பு பற்றிய இவ்வாக்குறுதியை முஸ்லிம்கள் மீறக் கூடாது.


அப்துல்லாஹ்வின் புதல்வரும் அல்லாஹ்வின் தூதருமாகிய முஹம்மதினால் அனைத்து கிறிஸ்தவர்களுக்குமாக எழுதப்பட்ட இந்த உடன்படிக்கைக்குச் சான்றாகவும், இதில் விபரிக்கப்பட்டுள்ள அம்சங்களை செயற்படுத்துவதற்கான உத்தரவாதமாகவும் பின்வரும் சாட்சியாளர்கள் கைகோர்த்திருப்பர்:


அலீ பின் அபீ தாலிப்; அபூபக்கர் பின் அபீ குஹாஃபா; உமர் பின் அல்-ஃகத்தாப்; உஸ்மான் பின் அஃப்பான்; அபூ அல்-தர்தா; அபூ ஹுறைறா; அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்; அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப்; ஹாரித் பின்
தாபித்; அப்துல் அழீம் பின் ஹஸன்; ஃபுழைல் பின் அப்பாஸ்; அஸ் – ஸுபைர் இப்னுல் அவ்வாம்; தல்ஹா பின் அப்தில்லாஹ்; ஸஅத் பின் முஆத்; ஸஅத் பின் உபாதா; தாபித் பின் நஃபீஸ்; ஸெய்த் பின் தாபித்; அபூ ஹனீபா பின் உபய்யா; ஹாஷிம் பின் உபய்யா; முஅஸ்ஸம் பின் குறஷீ; அப்துல்லாஹ் பின் அம்ர் இப்னுல் ஆஸ்; ஆமிர் பின் யாஸீன்.


இந்த உடன்படிக்கை இறைத்தூதரின் மஸ்ஜிதில் (அல்லாஹ்வின் சாந்தியும் அருளும் அன்னார் மீது உண்டாவதாக!) அலீ பின் அபீ தாலிபின் கைப்பட ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு முஹர்ரம் மாதம் மூன்றாம் நாள் எழுதப்பட்டது.


இவ்வுடன்படிக்கையின் ஒரு பிரதி ஸுல்தானின் (Sultan) கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. தாயிஃப் பிரதேச தோல் ஒன்றின் மீது இது எழுதப்பட்டு
இறைத்தூதரின் முத்திரையுடன் ஒப்பமிடப்பட்டுள்ளது (அன்னார் மீது சாந்தி உண்டாவதாக!).

இதன் உள்ளடக்கத்திற்கு கட்டுப்பட்டு நடப்பவர் நற்பாக்கியம் பெறுவாராக! அல்லாஹ்வின் மன்னிப்பை எதிர்பார்த்து நிற்போருள் ஒருவராக இருப்பவர் நற்பாக்கியம் பெறுவாராக!

மூலப்பிரிதியிலிருந்து பெறப்பட்ட இந்நகல் பிரதி மாண்புமிகு ஸுல்தானின் கையெழுத்துடன் முத்தியரையிடப்பட்டுள்ளது.


இந்த நகல் பிரதி அமீருல் முஃமினீன் அலீ பின் தாலிபின் கைப்பட எழுதப்பட்ட மூலப்படியிலிருந்து பெறப்பட்ட பிரதியின் பிரதியிலிருந்து பெறப்பட்டதாகும். – அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொள்வானாக!


தூர்ஸினாய் மலையில் வாழும் துறவிகள் சமூகமொன்றுக்கு வழங்கப்பட்ட இப்பிரதி மாண்புமிகு ஸுல்தானின் ஆணைப்படி -அல்லாஹ்வின் அருளால்-
இன்றும் நடைமுறையில் உள்ளது. அமீருல் முஃமினால் எழுதப்பட்ட மூலப் பிரதியின் நகல் தொலைந்து போனதால், இந்த ஆவணம் ஸுல்தானின் அரச ஆணைக்கு (Royal Decrees) பக்கபலமாக அமைகிறது. குறித்த சமூகத்திடம் காணப்படும் பதிவுகளும் அவ்வாணையை சான்றுப் படுத்துகின்றன.

இது மூலப்படியின் மீளெழுத்தே தவிர தழுவல் இல்லை.


மீளெழுதியவர்: அல்லாஹ்வின் பலவீனமான அடிமை அல்-பாரீ நூஹ் பின் அஹ்மத் அல்அன்ஸாரீ, எகிப்தைச் சேர்ந்த நீதிபதி (அவருக்கு பாதுகாப்பும் மன்னிப்பும் கிட்டுமாக!)

வட்டமுத்திரை இடப்பட்டு சான்றுப்படுத்தப்பட்டது.

நூஹ் அஹ்மத் அல்அன்ஸாரீ

(கையொப்பம்)

இக்கையெழுத்து இடப்பட்ட அசல் முத்திரையின் மாதிரியாக இதனை எழுதியவர்:

புராதன எகிப்தைச் சேர்ந்த நீதிபதி முஹம்மத் (அல்லாஹ்வின் மன்னிப்பு அவருக்கு கிட்டுமாக!)

அத்தியாயம் 2:


தூதர் முஹம்மத்

பாரசீக கிறிஸ்தவர்களுடன் செய்த உடன்படிக்கை


ஆக்கம்: தூதர் முஹம்மத்

அல்லாஹ்வின் நாட்டப் பிரகாரம்!
நிகரிலாக் கிருபை கொண்ட அல்லாஹ்வின் பெயரால்!


இக்கட்டளைகள் கையெழுத்தாக இதே பாணியில் கச்சிதமாக அனைவருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும். அரேபியா மற்றும் பாரசீகத்துக்குக் கிழக்காக அல்லது அவற்றின் எல்லைக்குள் உலகமெங்கும் பரந்து கிடக்கும் அனைத்து கிறிஸ்தவ தேசங்களும் கட்டுப்பட வேண்டிய ஓர் ஒப்பந்தம் இது. அத்தேசங்கள் இறைவிசுவாசிகளுடன் நேரடித் தொடர்புடையவையாக, அல்லது தொலைவானவையாக, அல்லது பரிச்சயம் கொண்டவையாக, அல்லது பரிச்சயமற்றவையாக இருப்பினும் சரி!

இந்த ஒப்பந்தமும் உடன்படிக்கையும் கீழ்படிந்து கட்டுப்பட ஏற்றது. முஸ்லிம்கள் அனைவரும் கூட இதன் நியமங்களுக்குக் கட்டுப்படுவது கடமை. இவ்வுடன்படிக்கையின் வார்த்தைகளுக்குக் கட்டுப்படுவது தனது கட்டாயக் கடமை என யார் கருதுகிறாரோ, அவரது இறை விசுவாசம் -சிறந்த முறையில் செயற்படுவோருக்கு அடுத்து- பரிபூரணமானது; நற்கூலிக்குத் தகுதியானவராய் அவர் கருதப்படுவார். மறுபுறம், இவ்வுடன்படிக்கையின் வார்த்தைகளை வேண்டுமென்றே திரிபுபடுத்துபவர் அல்லது ரத்துச் செய்பவர் அல்லது இழிவு செய்பவர் அல்லது இந்த உடன்படிக்கைகளின் கட்டளைகளுக்கு கட்டுப்பட மறுத்து அவற்றுக்கு முரணான பாதையில் செல்பவர் அல்லாஹ்வின் உடன்படிக்கையை அல்லது ஒப்பந்தத்தை முறிப்பவராக கருதப்படுவார்.


எவர் இவ்வாணையை அற்பமாகக் கருதி இழிவு செய்கிறாரோ அவர் – அரசனாயினும், பொதுமகனாயினும், பயபக்தி மிக்க (முஸ்லிம்) விசுவாசியாயினும், சாதாரண (கிறிஸ்தவ) விசுவாசியாயினும்- தண்டனைக்குத் தகுமானவராய் கொள்ளப்படுவார்.


அப்பால்: இவ்வுடன்படிக்கையின் வார்த்தைகளை அல்லாஹ்வினால் அதிகாரபூர்வமாக எனக்கு வழங்கப்பட்ட அகத்தூண்டுதலுக்கு இயைபாக திடமான ஆணையுடன் ஆரம்பிக்கிறேன். முன்பு வந்த எந்தத் தூதரும் இதுபோன்ற ஒன்றை மேற்கொண்டதில்லை; இவ்வாறு ஆணை பிறப்பிக்க இலகுவான ஒன்றை அல்லாஹ்வின் சன்னிதானத்தில் நிற்கும் எந்த வானவரும் கண்டதுமில்லை. ஆதலால், இவ்வுடன்படிக்கையில் நான் ஏற்படுத்த இருக்கும் கட்டளைகள் எனது மக்கள் அனைவரும் ஏற்றுப் பணிய வேண்டியவை.


விசுவாசிகளைப் பாதுகாப்பதும், அவர்கள் -அருகிலோ தூரத்திலோ- எங்கிருந்தாலும் அவர்களுக்கு உதவுவதும் தங்களது மாறாத கடமை என அனைத்து பயபக்தியுள்ள விசுவாசிகளும் கருதுவர்; கிறிஸ்தவ தேசமெங்கும் அவர்கள் வணக்கத்தில் ஈடுபடும் இடங்களையும் அவர்களது துறவிகளும் மத போதகர்களும் வசிக்கும் இடங்களையும் பாதுகாப்பர். மேற்கு, கிழக்கு, கடல், தரை, மலை, சமவெளி, பட்டினம், பாழிடம், பாலைவனம், இன்னும் எங்கெல்லாம் அவர்கள் இருந்தாலும் அவர்களின் மத நம்பிக்கையிலும் உடமையிலும் அவர்களுக்கு பாதுகாப்பு கிட்டும்.


முஸ்லிம்கள் என்னை மதித்து கௌரவப்படுத்துவது போன்றே, இம்மக்கள் எனது பாதுகாப்புக்கு உட்பட்டவர்கள் என்ற வகையில் இவர்களையும் பேணிக் காப்பர். எப்போது இவர்களுக்கு துயரமோ அசௌகரியமோ ஏற்பட்டாலும் முஸ்லிம்கள் கடமையுணர்வுடன் உதவி புரிவர்; இவர்கள் மீது அக்கறை செலுத்துவர். ஏனெனில், இம்மக்கள் எனது தேசத்தின் பிரஜைகள்; தங்கள் வாக்குறுதிக்கு கட்டுப்பட்டவர்கள். இவர்களுக்கு உதவக் கூடியவர்களும் அவர்களே.


ஆக- இம்மக்களைச் சூறையாட வழியாக அமையும் அனைத்தையும் அடக்கி, எல்லா எதிர்ப்புகளுக்கும் அழுத்தங்களுக்கும் முன்னால் இவர்களது செளகரியத்தையும் பாதுகாப்பையும் உதவியையும் கவனத்தில் கொள்வதே என் பொருட்டு சரியானதாகும். வரி அறவீட்டைப் பொறுத்தவரையில், அவர்களால் செலுத்த முடியுமான அளவை விட அதிகமாக விதிக்கப்படலாகாது; எவ்வித நிர்ப்பந்தமோ வன்முறையோ இன்றி, அவர்களின் ஒப்புதலுடன் விவகாரங்கள் அனுசரிக்கப்பட வேண்டும். அவர்களது நிறவனங்களுக்குள் எவரும் தலையீடு செய்யக் கூடாது; மத
நம்பிக்கைகள் குறித்தோ பாரம்பரியங்கள் குறித்தோ அவர்கள் துன்புறுத்தப்படக் கூடாது. அவர்கள் விரும்புகின்ற விதத்தில் அவர்களது வணக்கஸ்தலங்களில் அவர்களுக்கே உரித்தான மதச் சடங்குகளுக்கு இயைபாக வணக்கத்தில் ஈடுபட அவர்களுக்கு அனுமதியுண்டு. அவர்களது தேவாலயங்கள் அகற்றப்படவோ அழிக்கப்படவோ கூடாது; அவர்களது வீடுகளும் மாளிகைகளும் அவர்களது ஒப்புதல் இன்றி மஸ்ஜிதுகளுக்காகவோ, குடியிருப்புகளுக்காகவோ பெற்றுக் கெள்ளப்படலாகாது. எவரொருவர் இங்கு விபரித்திருப்பது போன்றல்லாது, எனது உத்தரவுகளுக்கு மாற்றமாக, செயற்படுகிறாரோ அவர் எனது இவ்வுடன்படிக்கையை இழிவுபடுத்தியவராகவும் அல்லாஹ்வினதும் அவனின் தூதரதும் வார்த்தையை மறுப்பவராகவும் கொள்ளப்படுவார்.

நான்கு தீனாரின் பெறுமதிக்கு அல்லது சணல் நூல் அங்கியான்றுக்கு அதிகமான நிலவரி அவர்களிடமிருந்து அறவிடப்படாது; அவை முஸ்லிம்களது பயன்பாட்டுக்காக அல்லது பொதுமக்களின் பயன்பாட்டுக்கான அறக்கட்டளையாக இட்டு வைக்கப்படும். இங்கு நாம் விவரிப்பதற்கு அப்பால் (தனியாள் வரி என்ற வகையில்) வேறெதுவும் அவர்களிடமிருந்து அறவிடப்படாது. அவர்கள் செல்வம் படைத்த வர்த்தகர்களாக அல்லது வெற்றிகொள்ளப்பட்ட பிரதேசங்களில் வாழ்வோராக அல்லது கடலில் முத்துக் குளிப்போராக அல்லது ரத்தின, தங்க, வெள்ளிச் சுரங்கங்களை வைத்திருப்போராக அல்லது செல்வம் கொழிக்கும் தோட்டங்களை வைத்திருப்போராக இருந்தாலும் பன்னிரண்டு திர்ஹமை விட அதிகமாக செலுத்தும்படி கேட்கப்பட மாட்டார்கள்.

கிறிஸ்தவ நம்பிக்கையைச் சாராதவராகவோ கிறிஸ்தவச் சடங்குகளின் படி மதவழிபாடு செய்யாதவராகவோ இருப்பவர்களிடமிருந்தும் நான்கு திர்ஹம் அறவிடப்படும். எனினும் இம்மக்களோடு இணங்கி, தங்களது வாக்கைப் பேணி நடப்போரிடம் -அவர்கள் தங்களது மக்கள் வசிக்கும் அதே இடத்திலேயே வசித்திருப்போர் என்ற அடிப்படையில்- மேற்சொன்ன பன்னிரண்டு திர்ஹமுக்கு அதிகமாகச் செலுத்துமாறு கோரப்பட மாட்டார்கள். பயணிகளும், நிரந்தர இருப்பிடமின்றி அலைந்து திரிவோரும் -அவர்கள் அனந்தரச் செல்வமேதும் பெறும் நிலை காணப்பட்டாலே தவிர- நிலவரிக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள். அவ்வாறு ஒருவர் அனந்தரச் சொத்தெதுவும் பெறுவாராயின், அதில் ஆட்சியாளருக்கு சட்டபூர்வ உரிமை காணப்படுமிடத்து, நியாயமான வரிமுறையே அமல்படுத்தப் படும். அந்நிலையிலும் கூட வரிசெலுத்துபவர் வன்முறைக்கு ஆளாக்கப்படவோ, தனது செலுத்து திறனுக்கு மிகையான சட்ட பூர்வமற்ற வரிக்கு ஆளாக்கப்படவோ மாட்டார். அவரது மாளிகைகளோ உற்பத்திகளோ விவசாய விளைச்சல்களோ பேராசைகளுக்குப் பலியாக்கப்பட மாட்டா.

இறைவிசுவாசத்தின் விரோதிகளுடன் முஸ்லிம்களுக்குச் சார்பாகப் போராடுமாறு கிறிஸ்தவர்கள் கேட்கப்பட மாட்டார்கள்; அந்நிய தேசங்களில் போரில் ஈடுபட்டிருக்கும் முஸ்லிம்கள் தங்களுடன் இனணந்து கொள்ளுமாறு அவர்களை கட்டாயப்படுத்தவும் மாட்டார்கள். எனினும் எதிரிகள் கிறிஸ்தவர்களைத் தாக்குவார்களாயின், அதற்கெதிராக முஸ்லிம்கள் தங்களதுகுதிரைகளையும் வாள்களையும் ஈட்டிகளையும் பயன்படுத்தத் தயங்க மாட்டார்கள். அத்தகைய நிலையில் அவர்கள் மிகச் சிறப்பாக செயல்படுவார்கள்.

எந்தக் கிறிஸ்தவரும் இஸ்லாத்தை ஏற்குமாறு நிர்ப்பந்திக்கப்பட மாட்டார். நல்ல விடயங்கள் தவிர்ந்த எதிலும் அவர்களுடன் முரண்படுவது தவிர்க்கப்படும். கிறிஸ்தவர்கள் எங்கிருந்தாலும் முஸ்லிம்கள் அவர்களுக்கு நேசக்கரம் நீட்டுவர்; ஒடுக்குமுறையாளர்களிடமிருந்து அவர்களை பாதுகாப்பர். ஒரு கிறிஸ்தவர் தவறுதலாக குற்றமொன்றை இழைத்தாலும் அவரை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்று -அல்லாஹ்வால் வரையறுக்கப்பட்டுள்ள தண்டனைக்கு- மேலதிகமாக அவர் தண்டிக்கப்படாதவாறு பாதுகாப்பதை முஸ்லிம்கள் தங்கள் கடமையாகக் கருதுவர்; வேதாகமத்தின் தீர்ப்புக்கேற்ப குறித்த பிணக்குடன் சம்பந்தப்பட்ட இரு தரப்புக்கும் இடையில் சமாதானம் ஏற்படுத்தப்படவும் முடியும்.

மேலே குறிக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளும் கடைப்பிடிக்கப்பட்டு, தலைக்கட்டு வரியும் செலுத்தப்பட்டு வரும் நிலையில் கிறிஸ்தவர்கள் எனது மக்களால் ஒடுக்கப்படவோ கொடுமைப்படுத்தப் படவோ கூடாது; அவ்வாறே அவர்களும் முஸ்லிம்களை கொடுமைப்படுத்தவோ ஒடுக்கவோ கூடாது. இப்போதிருந்து அல்லாஹ்வின் மறுகட்டளை வரும்வரை இது தொடரும்.

முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களது பெண்களையும் கன்னிகளையும் அவர்களது எஜமானர்களின் ஒப்புதல் இன்றி பலாத்காரமாக எடுத்துக் கொள்ள முடியாது. எனினும் அப்பெண்கள் தங்களது சுயதெரிவின் அடிப்படையில் முஸ்லிம்களுடன் இணையவும், நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ அவர்களைத் திருமணம் முடிக்கவும் விரும்புவார்களாயின், அது அவர்களுக்கு அனுமதிக்கப்படும். பெண்கள் தங்களது நம்பிக்கைக்கும் நேசத்துக்கும் பாத்திரமானவர்களை திருமணம் செய்ய சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்ற வகையில், அவர்களது சுதந்திரமான நாட்டத்துக்கு மதிப்பளிப்பதற்கே இந்த ஏற்பாடு.


ஒரு கிறிஸ்தவப் பெண் முஸ்லிம் ஒருவரை திருமணம் செய்தாலும் தனது கிறிஸ்தவ நம்பிக்கையின் படி தொடர்ந்து ஒழுகுவதற்கும், கிறிஸ்தவ தேவாலயங்களுக்குச் சென்று வழிபடவும் தடை இருக்காது; தனது சொந்த நம்பிக்கையின் படியும் சட்டதிட்டங்களின் படியும் அவள் சந்தோஷமாக வாழலாம்; தனது ஆன்மீக வழிகாட்டிகளுடன் தொடர்பாடல் மேற்கொள்ள அவளுக்குத் தடையிருக்காது; அவளது நம்பிக்கையையும் சட்டதிட்டங்களையும் கைவிடுமாறு அவளது விருப்பத்துக்கு முரணாக நிர்ப்பந்திக்கப்பட மாட்டாள். எவர் இவ்வுடன்படிக்கையின் விதிகளுக்கு மாறாகச் செயல்படுகிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு எதிராகச் செயற்படுபவராக கணிக்கப்படுவார்; இறைத்தூதரது உடன்படிக்கையிலுள்ள நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தாததால் அவரது பார்வையிலும் குற்றவாளியாக நோக்கப்படுவார்; அல்லாஹ்வின் முன் நிறுத்தப்படும் பாவிகளுள் ஒருவராகி விடுவார்.


கிறிஸ்தவர்கள் தங்களது தேவாலயங்கள், சிறு வணக்கஸ்தலங்கள், மடங்கள் என்பவற்றின் அனைத்து திருத்த வேலைகளையும் தாங்களே முன்னின்று மேற்கொள்ள வேண்டும். முஸ்லிம் நன்மக்களின் பொதுநலன் சார்ந்த அல்லது அவர்களது நம்பிக்கை சார்ந்த விவகாரங்களில் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களது உதவியை நாடும் சந்தர்ப்பத்தில் அவர்கள் அதனை மறுக்காமல், நட்பையும் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்தும் வகையில், தங்களால் முடிந்த உதவியை வழங்க வேண்டும். கிறிஸ்தவர்கள் எமக்குப் பணிந்து, எம்மிடம் அபயம் நாடி வந்தவர்கள் என்ற வகையில், நியாயபூர்வமான அனைத்து உதவி ஒத்தாசைகளையும் அவர்களுக்கு நாம் வழங்குவோம். அவர்களுள் எவராவது முஸ்லிம்களுக்கும் நிராகரிப்பாளர்களுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைக்காக அனுப்பி வைக்கப்பட்டால் அவரது நகர்வை எவரும் தடுக்க மாட்டார்; அவரது சேவை நமது விவகாரத்திற்கு உதவுமெனில் அது ஏற்றுக்கொள்ளப்படும். அவ்வாறான ஒருவரை இழிவு செய்பவர் அல்லாஹ்வின் தூதுருக்கு முன்னால் தீயவராகவும் குற்றவாளியாகவும் வேத வெளிப்பாட்டின் எதிரியாகவும் கணிக்கப்படுவார்.


[இங்கு மகத்தான இறைத்தூதரான முஹம்மத் (அல்லாஹ்வின் அருள் அன்னார் மீதும் குடும்பத்தார் மீதும் உண்டாவதாக!) கிறிஸ்தவ மக்களுடன் செய்து கொண்ட மற்றோர் ஒப்பந்தமும் உள்ளது. கிறிஸ்தவர்களது நம்பிக்கை மற்றும் சட்டதிட்டங்கள் தொடர்பான மேற்குறித்த அம்சங்கள் பிரகடனப்படுத்தப்பட்டு அமல்படுத்தப் பட்டதன் பிற்பாடு, கிறிஸ்தவர்கள் அனுசரிக்கவேண்டிய இன்னும் சில கட்டளைகளை உள்ளடக்கி அன்னார் இவ்வொப்பந்தத்தை அமைத்திருந்தார்கள். முன்னைய உடன்படிக்கைக்கு இது எவ்வகையிலும் முரணானதல்ல; மாறாக, இரண்டும் ஒன்றுக்கொன்று இணக்கப்பாடானவையே.]


அக்கட்டளைகளுள் ஒன்று:

முஸ்லிம்களைத் தாக்குவதற்கு வசதியளிக்கும் வகையில், கிறிஸ்தவர்கள் நிராகரிப்பாளர்களுக்கு பகிரங்கமாகவோ இரகசியமாகவோ எவ்வித உதவியும் வழங்கக் கூடாது; தங்கள் வீடுகளிலோ தேவாலயங்களிலோ எதிரிகள் தங்கியிருக்க இடமளிக்கக் கூடாது; எதிரிப்படைக்கு புகலிடம் வழங்கக் கூடாது; ஈட்டி, அம்பு, வாள், குதிரைபோன்ற தளவாடங்களை வழங்கியோ வேறு வகையிலோ உதவக் கூடாது.


கிறிஸ்தவர்கள் எதிரிகளுக்கு வழிகாட்டியாய் செல்லக் கூடாது; எவ்வாறு மறைந்திருந்து தாக்குவது என காண்பிக்க கூடாது; தங்கள் உடமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை எதிரிகளிடம் ஒப்படைக்க கூடாது; அவர்களுடன் தொடர்பாடல் செய்யக் கூடாது; வாக்கினாலோ செயலாலோ அவர்களுக்கு உதவக் கூடாது; பலாத்காரம் பிரயோகிக்கப்பட்டாலே தவிர எதிரிகளுக்கு புகலிடம் வழங்கக் கூடாது.

ஒரு முஸ்லிம் ஒரு கிறிஸ்தவரின் வீட்டில் தங்க நேரிட்டால், மூன்று பகல்களும் மூன்று இரவுகளும் அங்கு விருந்தாளியாக இருக்க முடியும்; அதற்கு மேல் அவரை உபசரிப்பது கட்டாயமில்லை. கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை விட்டு கொடுங்கோன்மையாளர்களின் தீங்கையும் ஒடுக்கு முறையையும் தடுத்துதவ வேண்டும்.


கிறிஸ்தவர்கள் முஸ்லிமொருவரை தங்கள் வீடுகளில் அல்லது வாழ்விடங்களில் மறைத்து வைக்க வேண்டிய அவசியம் தோன்றும் பட்சத்தில், அவருக்கு தங்கும் இடமொன்றை ஏற்படுத்திக் கொடுத்து பராமரித்து வரல் வேண்டும்; அவ்வாறு மறைந்திருக்கும் காலத்தில் உணவோ பராமரிப்போ இன்றி அவரை விட்டுவிடக் கூடாது; முஸ்லிம் பெண்களும் சிறுவர்களும் எதிரிகளுக்கு காட்டிக் கொடுக்கப்பட கூடாது.

கிறிஸ்தவர்கள் இக்கட்டளையிலிருந்து விலகி விடலாகாது. கிறிஸ்தவர் எவராவது இவ்வொப்பந்தத்திற்கு முரணாகச் செல்ல அல்லது புறக்கணிக்க முற்படுவாராயின், அவர் இதனை ரத்துச் செய்தவராக கருதப்படுவதுடன், இறைவனால் அருவருக்கப்பட்டவராகவும் மாறுவார். இறைத்தூதர் அவரை விசாரணைக்கு உட்படுத்தி நியாயமான தண்டனையும் வழங்குவார்.

ஆதலால்- இறைவனின் அடுத்த கட்டளை வரும் வரை அனைத்து கிறிஸ்தவர்களும் இவ்வொப்பந்தத்தின் நிபந்தனைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டியனவாகவும் அனுசரிக்க உகந்தனவாகவும் கொள்வார்களாக!


மேற்குறித்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் வகையில் மதகுருக்கள் மற்றும் தேசப் பிரபுக்களின் முன்னிலையில் இடப்பட்ட மகத்தான இறைத்தூதர் முஹம்மதின் கையொப்பம் இத்தால் இணைக்கப்பட்டுள்ளது.


அல்லாஹ் சர்வ வல்லமை மிக்கவன்; அனைத்துக்கும் அதிபதி!


அல்லாஹ்வினால் தெரிவுசெய்யப்பட்ட மகத்தான தூதராகிய முஹம்மதின் (அல்லாஹ்வின் அருள் அன்னார் மீதும் அன்னாரைச் சார்ந்தோர் மீதும்
உண்டாவதாக!) கட்டளைப் பிரகாரம் ஹிஜ்ரி நான்காம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களை அடுத்து வந்த திங்கட்கிழமை இவ்வொப்பந்தம் வரையப்பட்டது.

அத்தியாயம் 3:


தூதர் முஹம்மத்

நஜ்ரான் கிறிஸ்தவர்களுடன் செய்த உடன்படிக்கை


[ஆக்கம்: தூதர் முஹம்மத்]

[முகவுரை]


அளவற்ற கருணையும் நிகரற்ற கிருபையும் நிறைந்த அல்லாஹ்வின் பெயரால்!


அல்லாஹ்வினாலும் அவனது தூதரினாலும் நஜ்ரான் பிரதேச கிறிஸ்தவர்களாகிய வேதாகம மக்களுக்கும் பிற அனைத்து கிறிஸ்தவ பிரிவுகளுக்குமாக முன்வைக்கப் பட்டுள்ள பாதுகாப்பு உடன்படிக்கை இது.


அல்லாஹ்வின் தூதராகிய முஹம்மதினால் முழு மனித இனத்துக்கும் இது எழுதப்பட்டுள்ளது. அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் புறத்திலிருந்து வழங்கப்படும் இப்பாதுகாப்பு உத்தரவாதம், பின்னால் தோன்றவிருக்கும்
முஸ்லிம்களும் கட்டுப்பட வேண்டிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது; இதனை அவர்கள் புரிந்து, நம்பத் தகுந்ததாக ஏற்று, விசுவாசம் கொண்டு, தங்கள் நன்மைக்காக பேணிப்பாதுகாக்க வேண்டும்.


ஆட்சியாளராயினும், அதிகாரம் படைத்தவராயினும் இதனை ரத்துச் செய்யவோ மீறிச்செல்லவோ எவருக்கும் அனுமதி இல்லை. இந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் தவிர வேறெந்த
நிபந்தனைகளுக்கும் விசுவாசிகள் தங்களை ஆட்படுத்திக் கொள்ளக் கூடாது.


இதனைப் பேணி, மதித்து, இதன் கட்டளைகளுக்குப் பணிந்து நடப்பவர் தனது கடமைகளை நிறைவேற்றியவராகவும், இறைத்தூதரின் உடன்படிக்கையை பின்பற்றியவராகவும் மாறுவார்.


எவர் இதனை முறிக்கிறாரோ, அல்லது முரண்படுகிறாரோ, அல்லது மாற்றியமைக்கிறாரோ அவர் தனது குற்றத்தை தானே சுமந்து கொள்வார். ஏனெனில் அதன் மூலமாக அவர் அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கு துரோகம்
இழைக்கின்றார்; தனது நம்பிக்கையை முறித்துக் கொள்கின்றார்; அல்லாஹ்வின் அதிகாரத்தை எதிர்க்கிறார்; அவனது தூதரின் விருப்பத்தை மீறுகிறார்; அல்லாஹ்வின் பார்வையில் மோசடிக்காரனாக மாறுகின்றார்.

பாதுகாத்தல் என்பது அல்லாஹ்வின் மார்க்கத்தில் ஒரு கடமை. அதனையே இவ்வுடன்படிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே இவ்வுடன்படிக்கையைப் பேணி நடக்காதவர் தனது புனிதக் கடமைகளை மீறிச் செயற்பட்டவராகிறார். எவர் தனது புனிதக் கடமைகளை மீறிச் செல்கிறாரோ அவர் நம்பத் தகுதியற்றவர். அல்லாஹ்வினாலும் அவனது உண்மையான விசுவாசிகளாலும் அவர் நிராகரிக்கப்படுவார்.


அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் விசுவாசிகளிடமிருந்தும் கிறிஸ்தவர்கள் இப்பாதுகாப்பு உடன்படிக்கையை தங்களது ஓர் உரிமை என்ற வகையிலேயே பெறுகின்றனர். எனவே ஒவ்வொரு முஸ்லிமும் இதற்குக் கட்டுப்பட வேண்டும்; தங்களது நலனுக்காகவே இவ்வுடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு முஸ்லிமும் இதனை மதிப்பதும், பாதுகாப்பதும், தொடர்ச்சியாக பேணிக் காப்பதும் அதற்கேற்ப வாழ்வதும் கடமையாகும்.


நிச்சயமாக, முன்னைய மதங்களையும் புராதன வேதங்களையும் பின்பற்றிய மக்கள் அல்லாஹ்வின் பாலும் அவனது தூதரின் பாலும் தமது பகைமையை வெளிப்படுத்தினர்; மாட்சிமை நிறைந்த அல்லாஹ் தனது வேதத்தில் தெளிவாகப் பிரகடனப்படுத்தியுள்ள இறைத்தூதை மறுப்பதனூடாக தங்கள் வெறுப்பை வெளியிட்டனர். இது அவர்களது மனக்
கோணல்களையும், தீய எண்ணங்களையும், கடின சித்தத்தையுமே எடுத்துக் காட்டுகிறது. மறைக்காமல் பிரகடனப்படுத்தல் மற்றும் மறுக்காமல் சான்று
பகர்தல் என்பவற்றினூடாக அவர்கள் மீது அல்லாஹ் விதிக்க நாடியதை மறைத்துக் கொண்டதன் மூலமாக அவர்கள் தங்களது குற்றத்தின் சுமையை தாங்களாகவே தயார்படுத்திக் கொண்டனர்.


அம்மக்கள் தங்கள் மீது விதிக்கப்பட்ட கடமைக்கு எதிராக செயற்பட்டனர். அனுஷ்டிக்க வேண்டிய விதத்தில் அதனை அவர்கள் அனுஷ்டிக்கவில்லை; தெளிவாக அடையாளமிடப்பட்ட பாதைகளைப் பின்பற்றவுமில்லை; அல்லாஹ்வின் பாலும் அவனது தூதரின் பாலும் தங்கள் பகைமையை வெளிப்படுத்தி தாக்குதல் தொடுக்க மட்டுமே அவர்கள் உடன்பட்டனர். இத்தூதரை அல்லாஹ் மனித இனத்துக்கு உண்மையைப் பிரகடனப் படுத்துபராகவோ, போதனை புரிபவராவோ, அல்லாஹ்வை நோக்கி அழைப்பவராவோ, ஒளி விளக்காகவோ, தனக்குக் கட்டுப்படுவோருக்கு சொர்க்கத்தைக் கொண்டு வாக்களிப்பவராவோ, கட்டுப்படாதோருக்கு நரகம் குறித்து எச்சரிப்பவராவோ அனுப்பியிருக்க முடியாது என -நயவஞ்சக வழிகளாலும் போலி வாதங்களாலும்- மக்களை அவர்கள் தூண்டி விட்டனர்.

தூதரின் வேத வெளிப்பாட்டை மறுத்தல், அவரது தூதை நிராகரித்தல், கபடமான வழிகளில் அவரை ஆபத்துகளில் சிக்க வைத்தல் முதலிய -தாங்களே செய்யத் துணியாத காரியங்களில்- ஈடுபடுமாறு பிறரைத் தூண்டியதன் மூலமாக எதிர்ப்பின் வரம்புகளைக் கூட அவர்கள் தாண்டிச் சென்றனர்; இறைத்தூதரைக் குறிவைத்து அவரைக் கொல்லத் தீர்மானித்தனர்; அவருடன் போர் புரியவும், அவரது போதனைகளை எதிரக்கவும், முரண்படவும் குறைஷிக் கோத்திரத்தைச் சேர்ந்த இணைவைப்பாளர்களையும் பிறரையும் தீவிரப்படுத்தினர்.


இதனால், அல்லாஹ்வினதும் அவனது தூதரதும் அணியிலிருந்து விலக்கப்படும் நிலைக்கு அவர்கள் ஆளாகினர். ஹுனைன் யுத்த வேளையிலும், பனூ குறைழா மற்றும் பனூ நழீர் கோத்திரங்களுக்கெதிரான போராட்டங்களின் போதும் இவர்கள் நடந்து கொண்ட விதம் யாவரும் அறிந்ததே. இறைத்தூதருக்கெதிராக அல்லாஹ்வின் விரோதிகளான மக்காவாசிகளுக்கு இவர்களது தலைவர்கள் ஆதரவு வழங்கினர்; இறைவிசுவாசிகள் மீது கொண்ட காழ்ப்புணர்வின் காரணமாக இறைத்தூதருக் கெதிராக படைப்பலத்தாலும் ஆயுத பலத்தாலும் மக்காவாசிகளுக்கு உதவினர்.

கிறிஸ்தவர்கள் -இதற்கு மாறாக- அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராக போர்தொடுக்க மறுத்தனர். இம்மார்க்கத்தைப் பின்பற்றுவோர் பாலான
அவர்களது அன்பும் பாசமும் உண்மையானது என அல்லாஹ்வும் பிரகடனப்படுத்தி விட்டான்.

அவர்கள் குறித்து அல்லாஹ் தனது வேதத்திலும், வேறு வேத வெளிப்பாட்டு வசனங்களிலும் புகழ்ந்திருக்கிறான். யூதர்களது கடின சித்தம் பற்றியும், விசுவாசிகள் மீதான கிறிஸ்தவர்களது மனச்சாய்வு மற்றும் பாசம் பற்றியும் அவன் இவ்வாறு அடையாளப் படுத்துகிறான்:


நிச்சயமாக, விசுவாசம் கொண்டிருப்போரது கடும் விரோதிகளாக யூதர்களையும் இணை வைப்பாளர்களையும் (நபியே!) நீர் காண்பீர்; விசுவாசிகளுடன் நெருங்கிய பாசம் கொண்டவர்களாக நாங்கள் நஸரேயர்என்று கூறியோர் இருப்பதையும் நீர் காண்பீர். அவர்களுள் கற்றறிந்த மதகுருக்களும் துறவிகளும் இருப்பதுவும், அவர்கள் பெருமையடிக்காதோராக இருப்பதுவுமே இதற்குக் காரணம். இத்தூதருக்கு இறக்கப்பட்டதை அவர்கள் செவிமடுத்தால், சத்தியத்தை அறிந்து கொண்டதன் காரணமாக, அவர்களின் கண்கள் கண்ணீரால் நிரம்பி விடும். எங்கள் ரட்சகா! நாங்கள் விசுவாசம் கொண்டோம்; எனவே (இவ்வேதம் சத்தியமானது என) சாட்சி சொல்வோருடன் எங்களையும் பதிவு செய்வாயாக!என அவர்கள் கூறுவர். அல்லாஹ்வையும், எங்களிடம் வந்திருக்கும் சத்தியத்தையும் விசுவாசம் கொள்ளாதிருக்க எங்களுக்கு என்ன (தடை) உள்ளது?! எங்கள் ரட்சகன் எங்களை நன்மக்களுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றே நாங்கள் ஆசைப்படுகிறோம்! எனவும் கூறுவர்(5:82-84).


உண்மையில், தெய்வீக மார்க்கம் பற்றிய அறிவு கொண்ட, நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்த சில கிறிஸ்தவர்கள் இம்மார்க்கத்தைப் பிரகடனப்படுத்த எமக்கு உதவினர்; அல்லாஹ்வின் நாட்டப் பிரகாரமும், தூதர் தனது தூதை
எத்திவைக்க உதவும் வகையிலும் மக்களுக்கு உபதேசம் செய்வதனூடாக அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் உதவ அவர்கள் முன்வந்தனர்.


ஸெய்யித்[1], அபீஸோ, இப்னு ஹிஜ்றா, துறவி இப்றாஹீம், மதகுரு ஈஸா முதலியோர் நாற்பது குதிரை வீரர்களுடனும் வேறு பலருடனும் என்னைக் காண வந்தனர். அரேபிய தேசத்திலும் பிற நாடுகளிலும் கிறிஸ்தவ மதத்தைப் போதிப்பது அவர்களது நோக்கமாக இருந்தது. அவர்களுக்கு எனது தூது பற்றி எடுத்துரைத்து, அதனைப் பலப்படுத்தவும் பிரகடனப்படுத்தவும் உதவுமாறும், எனது தூதை ஆதரிக்குமாறும் கேட்டுக் கொண்டேன். அல்லாஹ்வின் பாதை தெளிவாகத் தெரிந்த போது அவர்கள் பின்வாங்கவில்லை; புறக்கணித்துச் செல்லவில்லை. மாறாக, இன்னும் நெருங்கி வந்தார்கள்; திடமாக நின்றார்கள்; இணங்கினார்கள்; ஒத்தாசை புரிந்தார்கள்; உறுதிப் படுத்தினார்கள்; தாராள வாக்குறுதிகளையும் நல்லாலோசனைகளையும் வழங்கினார்கள்; நான் கொண்டு வந்திருக்கும் சத்தியத்துக்கு உதவி புரிவதாகவும், அதனை மறுத்து முரண்படுவோரை தடுத்து நிறுத்துவதாகவும் சத்தியப்
பிரமாணங்கள் மூலமாகவும் உடன்படிக்கைகள் மூலமாகவும் உறுதியளித்தார்கள்.


அவர்கள் சென்று தங்கள் மதத் தோழர்களுடன் மீண்டும் இணைந்து கொண்ட பிறகு, தங்களது உடன்படிக்கையை முறிக்கவுமில்லை; அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ளவுமில்லை. மாறாக, என்னைப் பிரிந்து சென்ற போது அவர்கள் எனக்களித்த வாக்கைப் பேணினார்கள். மகிழ்ச்சி தரும் வகையில், தங்களது அர்ப்பணிப்பை நிரூபித்தார்கள் எனவும், யூதர்களுக்கு எதிராகப் போர் தொடுக்க ஒன்றிணைந்தார்கள் எனவும் அறிந்தேன். அல்லாஹ்வின் மார்க்கத்தை பிரபல்யப் படுத்தவும், அதற்கு ஆதரவளிக்கவும், அதன் தூதுவர்களைப் பாதுகாக்கவும் அவர்கள் அழைப்பாளர்களுடன் புரிந்துணர்வொன்றை ஏற்படுத்திக் கொண்டனர்; எனது தூதையும் வாக்கையும் மறுத்து இடையூறு செய்வதற்காக யூதர்கள் உதவியாகக் கொண்ட சான்றுகளின் பொய்மையை அம்பலப்படுத்தினர்.

கிறிஸ்தவர்கள் எனது செயற்பாடுகளுக்குப் பக்கபலமாக இருக்க முயன்றனர்; எனது கொள்கையை வெறுத்தோருக்கெதிராகவும், அதனைப் பொய்யாக்கி, மறுத்தொதுக்கி, திரித்து, அழித்தொழிக்க முயன்றோருக்கெதிராகவும் போர் தொடுத்தனர்.

எனது மார்க்கத்தின் மீது கிறிஸ்தவர்கள் காட்டிய வேட்கையைப் பாராட்டி உலகெங்கிலுமுள்ள அரபுத் தலைவர்களும், முன்னணி முஸ்லிம்களும்,
அழைப்பாளர்களும் எனக்கு கடிதங்களை அனுப்பினர். தங்களது பிராந்திய எல்லைக் காவலரண்கள் வழியாக மேற்கொள்ளப்பட்ட ஊடுருவல்களை தடுத்து நிறுத்த அவர்கள் காட்டிய ஆர்வத்தையும், என்னைச் சந்திந்த போது செய்து கொண்ட ஒப்பந்தத்தைப் பேணிக் காக்க அவர்கள் கொண்டிருந்த திடசங்கற்பத்தையும் அக்கடிதங்கள் எடுத்துக் காட்டின. திண்ணமாகவே,
போதகர்களும் துறவிகளும் எனது மார்க்கத்துடன் கொண்டிருந்த பிணைப்பில் அசைக்க முடியாத விசுவாசத்தைக் காண்பித்தனர்; எனது தூதின் பரவலை
உறுதிப்படுத்தவும், அதற்குப் பலமளிக்கவும் அவர்களது மக்கள் பெரும் அர்ப்பணம் செய்தனர்.


என் தூது பரப்பப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். எனது போதனையில் குற்றம் பிடித்து இழிவுபடுத்துவதனூடாக அதனை நிராகரித்து, அதன் பல்வேறு அம்சங்கைளை மறுத்துரைக்க முனைவோருக்கும், அழித்தொழிக்க நாடுவோருக்கும் எதிராக எனது நோக்கத்தினைச் சாதிக்க ஒன்றிணையுமாறு அவர்களிடம் நான் கேட்டேன். எனது அறிவுறுத்தலின்படி செயற்பட்டு எதிரிகளை அவர்கள் பணிய வைத்தனர்; வெற்றிகொள்ளப்பட்ட மக்களாக எதிரிகள் சத்தியத்தை -விரும்பியோ நிர்ப்பந்தமாகவோ- ஏற்று அடிபணியவும், அல்லாஹ்வின் அழைப்புக்கு செவிசாய்க்கவும் அவர்கள் கடுமையாக உழைத்தனர்.

கிறிஸ்தவர்களுக்கும் எனக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளைப் பேணும் வகையிலேயே இவ்வாறு அவர்கள் செயற்பட்டனர்; என்னுடனான சந்திப்பின் போது ஏற்றுக் கொண்ட பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறி விடாதிருக்கும் வகையில் அவர்கள் செயற்பட்டனர்; எனது பாதைக்குப் பலம் சேர்க்கவும், எனது தூதை பலரும் அறியச் செய்யவும் அவர்கள் கொண்டிருந்த பேரார்வத்தினால் இவற்றைச் செய்தனர்.


தங்களது விசுவாசம் மிக்க அர்ப்பணிப்பில் அவர்கள் யூதர்களிலிருந்தும் குறைஷிகளிலிருந்தும் பிற இணை வைப்பாளர்களிலிருந்தும் வேறுபட்டு நின்றார்கள். அல்லாஹ்வின் சட்டங்களை அற்ப விலைக்கு விற்றும்,
வட்டி நடைமுறை மூலமும் யூதர்கள் உலக ஆதாயங்களை வேட்கையோடு தேடி அலைவது போல் அவர்கள் தேடி அலைந்ததில்லை; அத்தகைய ஆதாயத்துக்காக செயற்படுவோருக்கு கேடு உண்டாகட்டும்! அவற்றை எழுதுவோருக்கும் கேடு உண்டாகட்டும்! அவ்வழிகளால் சம்பாதிப்போருக்கும் கேடு உண்டாகட்டும்!

இப்படித்தான் யூதர்களும் குறைஷிய இணை வைப்பாளர்களும் பிறரும் அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் எதிரிகளாக நோக்கப்படும் நிலையை அடைந்தனர். அவர்களது துரோகம் நிறைந்த சூழ்ச்சிகளும், விரோதமும், (எனக்கெதிராக) அவர்கள் தீட்டிய திட்டங்களும், இழைத்த கொடுமைகளும், என் எதிரிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் அவ்வப்போது மேற்கொண்ட யுத்தங்களுமே இதற்குக் காரணம். இதனால் அவர்கள் அல்லாஹ்வினதும், அவனது தூதரினதும், சிறந்த இறை நம்பிக்கையாளர்களதும் எதிரிகளாக மாறினர்.


கிறிஸ்தவர்களோ இதற்கு முற்றிலும் எதிர்மாறாக நடந்து கொண்டார்கள். அவர்கள் எனது நட்பை மதித்தனர்; எனது உரிமைகளை அங்கீகரித்தனர்; எங்களது சந்திப்பின் போது அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறவேற்றினர்; எல்லைப்புறங்களுக்கு நான் அனுப்பி வைத்த தளபதிகளுக்கு உதவினர்; கிழக்கிலும் மேற்கிலும் பரந்து வாழும் அனைத்து முஸ்லிம்களதும் பெயரால் நான் அவர்களுடன் சுயாதீனமாகச் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் கடமைப்பாடுகளை நிறைவேற்றியதன் மூலமாக எனது அக்கறையையும் பாசத்தையும் சம்பாதித்துக் கொண்டனர். நான் உயிரோடு இருக்கும் காலம் முழுவதும் அவர்கள் எனது பாதுகாப்பைப் பெறுவார்கள்; அல்லாஹ் என்னை மரணிக்கச் செய்த பிறகும் அவர்கள் பாதுகாக்கப் படுவார்கள். இஸ்லாம் இன்னும் பரவலடைந்து எனது சத்தியத்தூதும் விசுவாசமும் வளர்ச்சியடையும் காலமெல்லாம் இந்த உடன்படிக்கையை அனைத்து இறை நம்பிக்கையாளர்களும் முஸ்லிம்களும் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளனர். கடல்களில் நீர் நிறைந்திருக்கும் வரைவானத்திலிருந்து மழை பொழியும் வரைபூமியில் தாவரங்கள் முளைக்கும் வரைஇந்த ஒப்பந்தத்தை முறிக்கவோ, மாற்றியமைக்கவோ, கூட்டவோ, குறைக்கவோ எவருக்கும் அனுமதி இல்லை. ஏனெனில் அத்தகைய கூட்டுதல்கள் எனது உடன்படிக்கையில் வரம்புமீறலை ஏற்படுத்தி விடும்; குறைத்தல்கள் நான் வழங்கும் பாதுகாப்பை பலவீனப்படுத்தி விடும்.


இப்போது நான் ஏற்படுத்திக் கொள்ளும் இவ்வொப்பந்தம் எனக்கே கடமையாகி விடும். எனக்குப் பின்னர் எனது உம்மாவில் தோன்றும் எவராவது புகழும் மாட்சிமையும் நிறைந்த அல்லாஹ்வின் இவ்வுடன்படிக்கையை முறிப்பாராயின் அவருக்கெதிராக அல்லாஹ்வின் சாட்சியம் கொண்டு வரப்படும். சாட்சியம் வழங்க
அல்லாஹ் போதுமானவன்.


ஸெய்யித் கஸ்ஸானியிடமிருந்து வந்த மூவர் தங்களுக்கான பாதுகாப்புக் கேடயமாக அமையக்கூடிய ஆவணமொன்றை என்னிடம் கோரியமையே இவ்வாறு செயற்பட என்னைத் தூண்டியது. அவர்கள் முஸ்லிம்களுக்களித்த வாக்குறுதிக்கும், நான் அவர்களுடன் சுய விருப்பத்துடன் ஏற்படுத்திக்
கொண்ட உடன்பாடுகளுக்கும் அவர்கள் விசுவாசமாக நடந்து கொண்டதை உணர்ந்து அங்கீகரிக்கும் சாசனமொன்றை வழங்குமாறு என்னிடம் கேட்டுக் கொண்டனர்.

எங்களது இக்கூட்டணி பற்றிய தகவல்கள் எல்லா அரேபியப் பிராந்தியங்களிலும் எனது வழியை அடியொற்றி வரும் அனைவருக்கும் முன்னால் ஒப்புதல் பெற்று உறுதிப்படுத்தப்பட வேண்டும் என விரும்பினேன்; கிறிஸ்தவர்கள் என தம்மை அழைத்தவர்களாய், பல்வேறு கிறிஸ்தவப் பிரிவுகளுள் ஒன்றைப் பின்பற்றுகின்றவர்கள் (தீங்குக்கு உள்ளாக்கப்படுதல்) தொடர்பான குற்றத்திலிருந்து நானும் எனது அழைப்பாளர்களும் விலகியிருக்க வேண்டும் என்றும் விரும்பினேன்; இவ்வொப்பந்தம் மீறப்படாததாகவும், அனைத்து இறைவிசுவாசிகளாலும் முஸ்லிம்களாலும் மனப் பூர்வமாக ஏற்று பின்பற்றப்படும் கடமைப்பாடு கொண்டதாக அமைய வேண்டும் எனவும் விரும்பினேன்.

எனவேதான், முஸ்லிம்களது தலைவர்களையும், பிரதான தோழர்களையும் அழைத்து, கிறிஸ்தவர்களது கோரிக்கைக்கு உத்தரவாதம் வழங்கும் வகையில் இந்த ஆவணத்தை தயாரித்தேன். முஸ்லிம்கள் -பலம் பெற்றிருந்தாலும் இல்லாவிட்டாலும்- பரம்பரை பரம்பரையாக இதனை பேணிக் காக்க
கடமைப்பட்டுள்ளனர். தங்களது விசுவாசம் தொடர்பான பற்றுறுதியுடன் இணங்கிச் செல்லும் வகையிலும், இவ்வுடன்படிக்கையை என்னிடம் கோரியவர்களை மதிக்கும் வகையிலும், நான் ஏற்றுக் கொண்டுள்ள கடப்பாடுகளுக்கு உண்மையாளர்களாக இருக்கும் வகையிலும் எனது இக்கட்டளைகளை அவர்கள் நிறைவேற்ற வேண்டும்; அப்போதுதான் என் கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்தார்கள் என்ற கண்டனத்துக்கு அவர்கள் உள்ளாகாதிருப்பர்.


பொதுமக்கள் கூட இவர்களுக்குத் தீங்கிழைப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்; இவர்களுடன் நான் செய்து கொண்டுள்ள உடன்படிக்கைக்கு கட்டுப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் நம்பிக்கைக் கதவுகளின் வழியே என்னுடன் உள் நுழைய முடியும்; எனது தூதிற்கு ஆதரவளித்து இறைமறுப்பாளர்களதும் அவநம்பிக்கையாளர்களதும் கோபத்தை சம்பாதித்துக்
கொண்டவர்களுக்காக நான் செய்த உபகாரத்தில் அவர்களும் பங்கேற்க முடியும்.


இவர்கள் பெறத் தகுமான வகையில் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ள உரிமைகளை அங்கீகரிக்கத் தவறியதன் மூலமாக இஸ்லாத்தின் ஆதரவாளர்கள் இந்த ஆவணத்திற்கு எதிராக இருந்தார்கள் என இவ்வுடன்படிக்கையின் பேசுபொருளாக இருப்போரினால் எந்த வாதமும் முன்வைக்கப்படாதிருக்கவும் இது அவசியம்.


இறுதியாக- இவ்வுடன்படிக்கையானது [இறை நம்பிக்கையாளர்களுக்கு] இரக்க மனப்பான்மையை நினைவூட்டுகிறது; நல்லெண்ணம் கொள்ளத் தூண்டுகிறது; அறம் செய்ய ஏவுகிறது; தீயதைத் தடுக்கிறது; அல்லாஹ்வின் நாட்டப்படி, நேர்மையின் பாதையாகவும் நீதிக்கு இட்டுச் செல்லும் வழியாகவும் அமைகிறது.


[நஜ்ரான் கிறிஸ்தவர்களுடன் இறைத்தூதரின் உடன்படிக்கை]


அளவிலாக் கருணையும் நிகரிலாக் கிருபையும் நிறைந்த அல்லாஹ்வின் பெயரால்.


இச்சாசனம் அல்லாஹ்வின் தூதராகிய முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் அப்துல் முத்தலிபினால் முழு மனித இனத்துக்கும் முன்வைக்கபட்டுள்ளது. அந்தத் தூதர் உபதேசம் புரியவும் எச்சரிக்கை செய்யவும் அனுப்பப்பட்டவர்; தூதர்களும் வேத வெளிப்பாடும் வந்ததன் பிறகு சக்தியும் ஞானமும் நிறைந்த அல்லாஹ்வுக்கு முன்னால் மனிதர்கள் போலிக் காரணம் எதையும் சமர்ப்பிக்க வழியேற்படாத வகையில், அல்லாஹ்வின் படைப்புகளிடம் அவனது கட்டளையை ஒப்படைக்க நியமிக்கப்பட்டவர்.


ஸெய்யித் பின் ஹாரித் பின் கஅபுக்கும், அவரது மதத்தோழர்களுக்கும், -கிழக்கிலோ, மேற்கிலோ, அண்மையிலோ, தூரத்திலோ, அறபியராகவோ, அந்நியராகவோ, அறிமுகமானவராகவோ, அறிமுகம் அற்றவராகவோ- கிறிஸ்தவ மதத்தை தழுவி வாழ்ந்து கொண்டிருக்கின்ற அனைவருக்குமாக தயாரிக்கப்பட்டுள்ள இவ்வாவணம், அதிகாரபூர்வமானதோர் ஒப்பந்தமாகவும், நீதி, சமரசம் என்பவற்றின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட
ஆதாரபூர்வமான சான்றுப் பத்திரமாகவும், எவரும் மீற முடியாத உடன்படிக்கையாகவும் அமைகிறது.


எவர் இவ்வாணையைப் பின்பற்றுகிறாரோ அவர் இஸ்லாத்துடனான தனது பிணைப்பை எடுத்துக் காட்டுபவராகவும், இஸ்லாம் வழங்கக் கூடிய மிகப் பெறுமதியான வெகுமதிக்குத் தகுதியானவராகவும் இருப்பார். மறுபுறத்தில், இதனை நாசம் செய்பவர், அல்லது இது உள்ளடங்கியிருக்கும் கட்டளையை மீறுபவர், அல்லது மாற்றம் செய்பவர், அல்லது என் ஆணைக்கு கட்டுப்படாதவர் அல்லாஹ்வின் ஆணையை முறித்தவராகவும், அவனது கூட்டணியில் வரம்பு மீறியவராகவும், அவனது ஒப்பந்தத்தை அலட்சியம் செய்தவராகவும் மாறுகிறார்; அத்தகையவர், அதிகாரம் படைத்தவராக இருந்தாலும் வேறெவராக இருந்தாலும், அவனது சாபத்துக்கு தன்னை தகுதியாக்கிக் கொள்கிறார்.


ஒரு கூட்டணிக்கு என்னை நான் ஒப்புவிக்கிறேன்; அல்லாஹ்வின் சார்பாக அவர்களுக்கு வாக்குறுதி வழங்குகிறேன்; அவர்களில் முதலாமவரிலிருந்து இறுதியானவர் வரை அனைவரையும் அவனது தூதர்கள், அவனால் தெரிவு செய்யப்பட்டவர்கள், புனிதர்கள், முஸ்லிம்கள், இறைவிசுவாசிகள் ஆகிய அனைவரதும் காப்பின் கீழ் இருத்துகிறேன். அவர்களுடன் நான் ஏற்படுத்திக் கொண்டுள்ள கூட்டணியும் உடன்பாடும்
அப்படிப்பட்டது. அல்லாஹ்வுக்கு கட்டுப்படுமாறும், அவனது சட்டத்தைப் பின்பற்றுமாறும், அவனது தெய்வீகக் கூட்டிணைப்பை மதிக்குமாறும் இஸ்ராயீலின் சந்ததியர் மீது அல்லாஹ் சுமத்திய கடமைப்பாடுகளை மீண்டுமொரு முறை பிரகடனம் செய்கிறேன்.

கிறிஸ்தவர்கள் எவ்வளவு தூரத்தில் வாழ்ந்தாலும், எனது
ராச்சியத்தின் எல்லைப் புறங்களில் குடியிருந்தாலும், எனது பிராந்தியத்திற்கு அண்மையில் இருந்தாலும், சேய்மையில் இருந்தாலும் -யுத்த காலத்தைப் போலவே சமாதான காலத்திலும்- எனது குதிரை வீரர்களாலும்,
காலாட் படையினராலும், இராணுவத்தாலும், இதர வளங்களாலும், முஸ்லிம் ஆதரவாளர்களாலும் பாதுகாக்கப்படுவர் என இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

அவர்களுக்கு ஆதரவளிக்கவும், அவர்களது மக்களையும் தேவாலயங்களையும் சிறு கோயில்களையும் செபக் கூடங்களையும் துறவியர் மடங்களையும் பர்ணசாலைகளையும் எனது பாதுகாப்பின் கீழ் வைத்திருக்கவும் உறுதியளிக்கின்றேன்; மலைகள், பள்ளத்தாக்குகள், குகைகள், குடியிருப்புப் பிரதேசங்கள், சமவெளிகள், பாலைவனங்கள் முதலிய எவ்விடத்தில் அவை காணப்பட்டாலும் சரி!


அவர்களது மதமும் தேவாலயமும் தரையிலிருந்தாலும், கடலிலிருந்தாலும், மேற்கிலிருந்தாலும், கிழக்கிலிருந்தாலும் அவற்றை அதியுச்ச விழிப்புணர்வுடன் நானும் என் வீட்டினரும் முழு மொத்த முஸ்லிம்களும் பாதுகாப்போம்.


அவர்களை எனது பாதுகாப்பில் வைக்கிறேன்; அவர்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்கிறேன்; எத்தகைய தீங்கிலிருந்தும் அவர்களைப் பாதுகாக்கவும்,
எல்லா விதமான கோரிக்கைகளிலிருந்தும் கடுமையான கடப்பாடுகளிலிருந்தும் விலக்களிக்கவும் உறுதியெடுத்துக் கொள்கிறேன்; என்னையும் அவர்களையும் இலக்கு வைக்கும் எல்லா எதிரிகளிடமிருந்தும் எனது உதவியாளர்கள் மூலமாகவும், என்னை பின்பற்றுவோர் மூலமாகவும், அரசு மூலமாகவும் அவர்களைப் பாதுகாக்க சங்கற்பம் செய்கிறேன்.


அவர்கள் மீது அதிகாரம் பெற்றிருப்பவர் என்ற வகையில், அவர்களை நான் அனைத்துப் பாதிப்பிலிருந்தும் காப்பாற்றி நிர்வகிக்க வேண்டும்; எனக்கும் என்னுடன் இணைந்து இஸ்லாத்தைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள எனது தோழர்களுக்கும் நிகழாத எதுவும் அவர்களுக்கும் நிகழாதிருப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.


இறைவிசுவாசிகள் படையெடுத்துச் சென்று வெற்றி பெறும் வேளையில் அம்மக்கள் மீது மேலாண்மை செலுத்துவதையும், அவர்களாகவே மனமொப்பித் தராத போது வரிசெலுத்துமாறு கட்டாயப் படுத்துவதையும் தடைசெய்கிறேன். இவ்விவகாரத்தில் எந்த கிறிஸ்தவரும் கொடுமைக்கோ ஒடுக்குதலுக்கோ உட்படுத்தலாகாது.


ஒரு மதகுரு அவரது குருபீடத்திலிருந்தோ, ஒரு துறவி அவரது துறவு மாடத்திலிருந்தோ, ஒரு தபசி அவரது தபோவனத்திலிருந்தோ அகற்றப்படலாகாது. அவர்களது தேவாலயங்களில் எப்பாகத்தையும் இடிப்பதோ, அவர்களது கட்டிடங்களிலிருந்து பாகங்களைப் பெற்று மஸ்ஜிதுகளை அல்லது முஸ்லிம்களது வீடுகளை அமைப்பதோ அனுமதிக்கப்பட்டதன்று. எவர் அவ்வாறு செய்கிறாரோ அவர் அல்லாஹ்வின் உடன்படிக்கையை மீறுகிறார்; அவனது தூதருக்குக் கட்டுப்பட்டவராகிறார்; தெய்வீகக் கூட்டணியிலிருந்து பிரிந்தவராகி விடுகிறார்.


துறவிகள் மீது, அல்லது பாதிரிகள் மீது, அல்லது அவர்கள் போன்று பற்றற்றவர்களாக கம்பளி ஆடை அணிந்தோ மலைகளில் தனியாக ஒதுங்கியோ மனிதக் குடியிருப்புக்களை தவிர்த்து வேறு பிரதேசங்களிலோ
வாழ்கின்றவர்கள் மீது தலைக்கட்டு வரியோ வேறு விதமான வரியோ விதிக்கப்படலாகாது.

மதகுருக்கள், துறவிகள், சன்னியாசிகள் தவிர்ந்த கிறிஸ்தவர்கள் அனைவரும் வருடமொன்றுக்குச் செலுத்த வேண்டிய வரி நான்கு திர்ஹமாக மாத்திரம்
இருக்கட்டும்; இல்லையெனில், கோடிட்ட துணியால் தைக்கப்பட்ட ஆடையொன்றையோ யெமன் நாட்டு வேலைப்பாடு கொண்ட தலைப்பாகை ஒன்றையோ அவர்கள் வழங்கட்டும். அது முஸ்லிம்களுக்கும், பொதுத் திறைசேரி வளர்ச்சிக்கும் உதவுவதற்காகவே. ஆடை வழங்குவது சிரமமாக இருக்கும் பட்சத்தில், அவர்களாக விரும்பி அதற்குரிய பெறுமதியை வழங்கட்டும்.

வருமானம் பெறுகின்ற, சொந்தமாக நிலம் வைத்திருக்கின்ற, தரையிலோ கடலிலிலோ கணிசமான வணிகச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற, பெறுமதி வாய்ந்த ரத்தினங்களையும் தங்கத்தையும் வெள்ளியையும் அகழ்ந்தெடுக்கின்ற, செல்வம் படைத்த கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை அவர்கள் இந்நாடுகளின் குடிமக்கள் என்ற வகையில் அல்லது அங்கு குடியிருப்பவர்கள் என்ற வகையில், வருடமொன்றுக்கு மொத்தமாக பன்னிரண்டு திர்ஹமை தாண்டாத தொகையை தலைக்கட்டு வரியாக செலுத்தலாம்.

இந்நாடுகளின் குடிமக்களைச் சாராத பயணிகளிடமும், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றறிய முடியாத வழிப்போக்கர்களிடமும் இத்தகைய எதுவும் அறவிடப்படாது.


நிலவுடமையாளர்கள் தவிர்ந்த எவரிடமும் தலைக்கட்டு வரியுடன் சேர்த்து நிலவரியும் அறவிடப்படாது. ஆட்சியாளர்களது அதிகார எல்லைக்குள் அசையாச் சொத்துகளை அனந்தரமாகப் பெற்றிருப்போரும் நிலவுடமையாளர் போன்றோரே. அவர்களது சக்திக்கு அப்பால் கட்டணங்கள் உயர்த்தப்படாமல் நியாயமான வரியே அறவிடப்படும். நிலவுடமையாளர்களது செலவில் அவர்களது நிலங்களை உழுது, பண்படுத்தி, பயிரிட்டு அறுவடை செய்யும் பணியில் ஈடுபடும் தொழிலாளர் படையைப் பொறுத்தவரை, அவர்கள் மீது அளவுக்கு மீறிய வரிவிதிக்கப்பட மாட்டாது; அவர்களும் தம்மைப் போன்ற பிற கிளையார்கள் போன்றே வரி செலுத்துவர்.


எமது கூட்டணியில் இணைந்திருப்போர் முஸ்லிம்களுடன் சேர்ந்து எதிரிகளுக்கு முகங்கொடுக்கவோ அவர்களைத் தாக்கவோ, சிறைப்பிடிக்கவோ செல்ல வேண்டியதில்லை. சொல்லப் போனால், இக்கூட்டணி அங்கத்தவர்கள் போரில் ஈடுபடப் போவதே இல்லை. இன்னும் துல்லியமாகச் சொன்னால், இக்கடமைப்பாட்டிலிருந்து அவர்களை விடுவித்து, முஸ்லிம்களால் அவர்களுக்கு வழங்க முடியுமான உதவியையும் பாதுகாப்பையும் உத்தரவாதப் படுத்துவதற்காகவே இவ்வுடன்படிக்கை செய்து
தரப்பட்டுள்ளது. எந்தக் கிறிஸ்தவரும் -சுயாதீனமாகப் பங்களிக்க முன்வந்தாலே தவிர- வேறெந்த வகையிலும் எதிரிகள் மீதான தாக்குதலுக்காக முஸ்லிம்களுக்குப் பணமாகவோ ஆயுதமாகவோ குதிரைகளாகவோ தளவாடங்களை வழங்குமாறு கட்டாயப்படுத்தப்பட மாட்டார். எனினும் அவ்வாறு சுயமாக முன்வந்து பங்களிப்பு வழங்குபவர் பாராட்டுக்கும் வெகுமதிக்கும் நன்றிக்கும் உரியவராவார்; அவரது உதவி எப்போதும் நினைவு கூரப்படும்.

எந்தக் கிறிஸ்தவரும் நிர்ப்பந்தமாக முஸ்லிமாக மாற்றப்பட மாட்டார்; “மேலும், வேதக்காரர்களுடன் அழகிய வழிமுறையிலேயன்றி தர்க்கம் புரியாதீர்கள்” (29:46); இரக்கம் என்ற இறக்கையினுள் அவர்கள் அரவணைக்கப்பட வேண்டும்; எங்கிருந்தாலும், எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் அவர்களுக்கு நேரக்கூடிய எல்லாத் தீங்குகளும் தடுக்கப்பட வேண்டும்.


ஒரு கிறிஸ்தவர் குற்றமொன்றை அல்லது தவறொன்றைச் செய்து விட்டால் கூட முஸ்லிம்கள் அவருக்குத் தேவையான உதவியையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டும்; அவரது தவறை மன்னிக்க வேண்டும்; அந்தத் தவறால் பாதிக்கப்பட்டவரைக் கூட மன்னிப்பதன் மூலமாக அல்லது இழப்பீடு பெற்றுக் கொள்வதன் மூலமாக சமரசம் செய்து கொள்ளத் தூண்ட வேண்டும்.


முஸ்லிம்களுக்கு என்ன நன்மை கிட்டினாலும் அது கிறிஸ்தவர்களுக்கும் கிட்ட வேண்டும் என்ற வகையிலும், முஸ்லிம்களுக்கு என்ன தீங்கு நேர்ந்தாலும் அது கிறிஸ்தவர்களுக்கும் நேரக்கூடியதே என்ற வகையிலும் இவ்வுடன்படிக்கையை நான் அல்லாஹ்வின் சார்பில் செய்திருப்பதால், முஸ்லிம்கள் அவர்களைக் கைவிடவோ புறக்கணிக்கவோ உதவியின்றி விட்டு விடவோ கூடாது. இவ்வுடன்படிக்கையின் படி, எமது பாதுகாப்பை அனுபவிக்கவும், அனைத்து உரிமை மீறல்களிலுமிருந்து பாதுகாக்கப்படவுமான மீறக்கூடாத உரிமைகளை அவர்கள் பெற்றுள்ளனர். அந்த வகையிலேயே, நன்மையிலும் தீமையிலும் அவர்கள் முஸ்லிம்களுடன் இணைந்திருப்பர்.


கிறிஸ்தவர்களை அவர்கள் விரும்பாத திருமணங்களுக்கு எவரும் கட்டாயப்படுத்தி துன்பப்படுத்தலாகாது. முஸ்லிம்கள் கிறிஸ்தவப் பெண்களை அவர்களது பெற்றோரின் விருப்பத்திற்கு முரணாக திருமணம் செய்யக் கூடாது; தங்களது திருமணக் கோரிக்கையை அவர்களது குடும்பங்கள் மறுத்து விட்டால் அதற்காக அவர்களை ஒடுக்க முற்படவும் கூடாது; இத்திருமணங்கள் அவர்களது விருப்பமும் உடன்பாடும் ஒப்புதலும் சம்மதமும் இன்றி இடம்பெறலாகாது.
ஒரு முஸ்லிம் கிறிஸ்தவ யுவதியை திருமணம் செய்தால், அவளது கிறிஸ்தவ நம்பிக்கைகளை மதிக்க வேண்டும்; அவள் விரும்பியவாறு அவளது மதத் தலைவர்களது உரைகளுக்குச் செவிமடுக்கவும், அவளது மார்க்கத்தைப் பின்பற்றவும் சுதந்திரம் வழங்க வேண்டும். இக்கட்டளைக்கு மாறாக, எவரொருவர் தனது மனைவியை எந்த வகையிலாவது அவளது மதத்துக்கு முரணாகச் செயல்படுமாறு நிரப்பந்திக்கிறாரோ, அவர் அல்லாஹ்வின் கூட்டணியை முறித்தவராகவும், அவனது தூதரது உடன்படிக்கைக்கு எதிராக வெளிப்படையாகவே கிளர்ச்சி செய்தவராகவும் மாறுகிறார்; அல்லாஹ் அவரை மோசடிக்காரருள் ஒருவராகக் கணிக்கிறான்.


கிறிஸ்தவர்கள் தங்களது தேவாலயங்களையும் கன்னியர் மடங்களையும் திருத்தியமைப்பதற்கு அல்லது தங்களது விவகாரங்களுடன் தொடர்புபட்ட விடயங்களை ஒழுங்குபடுத்துவதற்கு முஸ்லிம்களது உதவி ஒத்தாசையை நாடி வந்தால் அவர்களுக்கு முஸ்லிம்கள் உதவுவதும் ஆதரவு வழங்குவதும் அவசியம். வெகுமதி எதனையும் எதிர்பார்த்தல்ல. இறைத்தூதரின் ஒப்பந்தத்திற்கு விசுவாசமாக மார்க்கத்தை மீள நிலைநிறுத்துவதற்காகவும், அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் மெச்சத்தக்க செயல் என்ற வகையிலும் முற்றிலும் இலவசமாகவே இதனை அவர்கள் செய்ய வேண்டும்.


முஸ்லிம்களுக்கும் எதிரிகளுக்குமிடையிலான போர் விவகாரங்களில் எந்த கிறிஸ்தவரையும் தூதுவராகவோ, ஒற்றராகவோ, வழிகாட்டியாகவோ, உளவாளியாகவோ வேறெந்த போர்ப் பணியாளர்களாகவோ முஸ்லிம்கள் அமர்த்தக் கூடாது. எவரொருவர் அவ்வாறு செயற்படுமாறு அவர்களுள் ஒருவரை ஏவுகிறாரோ அவர் அல்லாஹ்வின் உரிமைகளில் இடர்பாட்டை ஏற்படுத்துகிறார்; அவனது தூதருக்கெதிராக கிளர்ச்சி செய்கிறார்; அவனது கூட்டணியிலிருந்து தன்னை வெளியேற்றிக் கொள்கிறார். கிறிஸ்தவர்களது மார்க்கம் சார்பில் அல்லாஹ்வின் தூதராகிய முஹம்மத் பின் அப்துல்லாஹ் விதித்திருக்கும் இக்கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதற்கு அப்பால் (கிறிஸ்தவர்கள் தொடர்பாக) வேறெதனைச் செய்வதற்கும் ஒரு முஸ்லிமுக்கு அனுமதியில்லை.

நான் (கிறிஸ்தவர்களுக்கும்) சில நிபந்தனைகளை இடுகிறேன். தங்களது மார்க்கம் ஏவுவது போன்று அவற்றைத் திருப்திகரமாக நிறைவேற்றுவதாக
அவர்கள் வாக்குறுதி தர வேண்டும். அவர்களுள் எவரும் போரெதிரியின் சார்பில் எந்த முஸ்லிமுக்கெதிராகவும் -வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ- செயற்படவோ உளவு பார்க்கவோ கூடாது என்பது அந்நிபந்தனைகளுள் ஒன்று. முஸ்லிம்களது எதிரிகள் தருணம் பார்த்துத் தாக்குதல் தொடுக்க வசதியளிக்கும் வகையில் எந்தக் கிறிஸ்தவரும் தங்களது வீடுகளில் அவர்களுக்கு புகலிடம் அளிக்கக் கூடாது; அவர்களது பிரதேசங்களில் -அவை அவர்களது கிராமங்களாய் இருந்தாலும், செபக் கூடங்களாய் இருந்தாலும், அவர்களது மதத் தோழர்களுக்குச் சொந்தமான வேறெந்த இடமாக இருந்தாலும்- எதிரிகள் தரித்திருப்பதற்கு இடமளிக்கலாகாது; முஸ்லிம்களுடன் போரிடும் எதிரிகளுக்கு ஆயுதங்கள், குதிரைகள், ஆளணி போன்ற உதவிகளைச் செய்வதோ உபசரணை வழங்குவதோ கூடாது; அவர்களுக்கு மத்தியில் தங்கள் கால்நடைகளோடு தரிக்கின்ற முஸ்லிம்களை அவர்கள் மூன்று பகல்களும் மூன்று இரவுகளும் உபசரிக்க வேண்டும்; முஸ்லிம்கள் எங்கு காணப்பட்டாலும், எங்கு
சென்று கொண்டிருந்தாலும் கிறிஸ்தவர்கள் அவர்களுக்கு தாங்கள் அன்றாடம் உண்பது போல் உணவு வழங்க வேண்டும். எனினும், வேறு சிரமமான அல்லது கடுமையான சுமைகள் எதையும் தாங்கிக் கொள்ள வேண்டிய கடப்பாடு அவர்களுக்குக் கிடையாது.


அவர்களது வீடொன்றில் அல்லது செபக் கூடமொன்றில் ஒரு முஸ்லிம் ஒளிந்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டால், அவர்களுக்கு மத்தியில் அவர் தரித்திருக்கும் நேரம் முழுவதும் உணவும் உபசரிப்பும் வழிகாட்டலும் வழங்க வேண்டும்; அவரது அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கும் அதேவேளை அவரை மறைத்து வைத்திருக்கவும், எதிரிகள் அவரைக் கண்டு பிடிப்பதை தடுக்கவும் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.


எவர் இச்சாசனத்தின் விதிகளுக்கு மாறு செய்கிறாரோ அல்லது அவற்றை மாற்றியமைக்கிறாரோ அவர் அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனுமான கூட்டணியிலிருந்து வெளியேற்றப்படுவார்.


மதத் துறவிகளுடன் நானாக ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்படிக்கைகளையும் ஒப்பந்தங்களையும் அனைவரும் மதித்துக் கட்டுப்படுவார்களாக! அவ்வாறே, ஒவ்வொரு தூதரும் தனது சமுதாயத்தவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், உத்தவாதப்படுத்தும் வகையிலும் அவர்கள் தொடர்பாக ஏற்றுக் கொண்ட பொறுப்புகளை அனைவரும் மதிப்பார்களாக!

அல்லாஹ்வின் நாட்டப்படி மறுமை நாள் தோன்றும் வரை இது மீறப்படவோ மாற்றப்படவோ கூடாது.


கிறிஸ்தவர்களுடன் முஹம்மத் பின் அப்துல்லாஹ் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையை உள்ளடக்கியிருக்கும் இவ்வாவணமும், அவர்கள் தொடர்பாக இதில் விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளும் பின்வருவோரால் சாட்சியமளிக்கப்பட்டவை:


அதீக் பின் அபீ குஹாபா; உமர் இப்னுல் ஃகத்தாப்; உஸ்மான் பின் அப்பான்; அலீ பின் அபீ தாலிப்; அபூ தர்; அபூ அல்-தர்தாஉ; அபூ ஹுறைறா; அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்; அல்-அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப்; அல்-ஃபழ்ல் இப்னுல் அப்பாஸ்; அஸ்-ஸுபைர் இப்னுல் அவ்வாம்; தல்ஹா பின் உபைதில்லா; ஸஅத் பின் முஆத்; ஸஅத் பின் உபாதா; துமாமா பின் கைஸ்; ஸெய்த் பின் தாபித் மற்றும் அவரது மகன் அப்துல்லாஹ்; ஹுர்கூஸ் பின் ஸுஹைர்; ஸெய்த் பின் அர்கம்; உஸாமா பின் ஸெய்த்; உமர் பின் மழ்ஊன்; அம்மார்; முஸ்ஆ பின் ஸுபைர் பின் ஜுபைர்; அபுல் ஆலியா; அப்துல்லாஹ் பின் அம்ர் இப்னுல் ஆஸ்; அபூ ஹுதைபா; கஅப் பின் மாலிக்; ஹய்யான் பின் தாபித்; ஜஅஃபர் பின் அபீதாலிப்; (முஆவியா பின் அபீ ஸுஃப்யானால் எழுதப்பட்டது).

அத்தியாயம் 4:


தூதர் முஹம்மத்

உலகளாவிய கிறிஸ்தவர்களுடன்

செய்த உடன்படிக்கை

(மவுண்ட் கார்மல் கையெழுத்துப்படி)


[ஆக்கம்: தூதர் முஹம்மத்]


அளவற்ற கருணையும் நிகரற்ற கிருபையும் நிறைந்த அல்லாஹ்வின் பெயரால்.


இது -நன்மாராயம் கூறுபவரும் எச்சரிப்பவருமான- தூதர் முஹம்மதினால் அல்லாஹ்வின் பாதுகாப்புக்கு உரித்துடைய எல்லா மக்களுக்காகவும், கிழக்கிலும் மேற்கிலும் அரேபியாவிலும் வெளியிலும் அருகிலும் தூரத்திலும் அறிமுகமான நிலையிலும் அறிமுகமற்ற நிலையிலும் பரந்து காணப்படுகின்ற கிறிஸ்தவ மதத்துக்கான அல்லாஹ்வின் சான்றாகவும் வரையப்பட்டுள்ளது.

கிறிஸ்தவர்களுக்காக தயார் செய்யப்பட்டுள்ள இவ்வாவணம் அதிகார பூர்வமானதோர் உடன்படிக்கையாகவும், நன்கறியப்பட்ட சான்றுப் பத்திரமாகவும், அவர்களைப் பாதுகாப்பதற்கான கௌரவமான ஏற்பாடாகவும் அமைகிறது.

எவர் இஸ்லாத்தின் படி ஒழுகுகிறாரோ அவர் இதற்கு கட்டுப்படுவார்; எவர் இந்த ஏற்பாடு உள்ளடக்கியிருக்கும் உடன்படிக்கையை முறிக்கிறாரோ அல்லது முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத்தியில் வரம்பு மீறி என் கட்டளைக்கு முரணாகச் செயல்படுகிறாரோ, அவர் அல்லாஹ்வின் உடன்படிக்கையை மீறுகிறார்; அவனது பிரமாணத்தை மறுக்கிறார்; அவனது பாதுகாப்பை அலட்சியம் செய்கிறார். அவர் ஆட்சியாளராக இருந்தாலும் சரி; விசுவாசிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியிலுள்ள வேறெவராக இருந்தாலும் சரி!


என்னிடமும் முஸ்லிம்களைச் சேர்ந்த எனது அனைத்து உறவுகளிடமும் இருந்து கூட்டணிகளையும் வாக்குறுதிகளையும் வேண்டியோருக்கு அவற்றை வழங்கவும், அல்லாஹ்வின் உடன்படிக்கையையும் உறுதிமொழியையும் வழங்கவும் என்னை நான் அர்ப்பணிக்கிறேன். ஆரம்பம் முதல் இறுதி வரையான முஸ்லிம்களிலும் விசுவாசிகளிலும் உள்ள அல்லாஹ்வின் தூதர்களதும், அவனால் தெரிவுசெய்யப்பட்டோர்களதும், புனிதர்களதும் பாதுகாப்பின் கீழ் இம்மக்களை இட்டு வைக்கிறேன்; எனது பாதுகாப்பும் ஒப்பந்தமுமே கட்டுப்படுமாறு கோரவும், கடப்பாடுகளை ஏற்றுக் கொள்ளவும், அல்லாஹ்வின் உடன்படிக்கையை மதிக்குமாறு கேட்கவுமான உரிமையை அல்லாஹ் தனது தூதர் ஒருவருக்கு அல்லது நெருங்கிய வானவர் (அல்லது அரசர்) ஒருவருக்கு வழங்கிய மிகத் திடமான ஒப்பந்தமாகும்.


இவர்களது நீதிபதிகளை எனது பலப்படுத்தப்பட்ட எல்லைகளுக்குள் எனது குதிரைகளாலும், விசுவாசிகளிலுள்ள எனது மனிதர்களாலும், எனது
உதவியாளர்களாலும், என்னைப் பின்பற்றுபவர்களாலும் பாதுகாப்பேன்; இவர்கள் தூரத்திலிருந்தாலும், அருகிலிருந்தாலும், சமாதானத்தில் இருந்தாலும், போரில் இருந்தாலும் அனைத்து எதிரிப் பிராந்தியங்களிலிருந்தும் பாதுகாப்பேன்; இவர்களது தேவாலயங்களும் புனித யாத்திரைத் தலங்களும் எங்கிருந்தாலும், எங்கு காணப்படும் சாத்தியம் இருந்தாலும், குகைகளில் அல்லது குடியிருப்புப் பகுதிகளில் அல்லது சமவெளிகளில் அல்லது பாலைவனத்தில் அல்லது கட்டிடங்களில் அமைந்திருந்தாலும் அவற்றுக்கு நான் பாதுகாப்பு வழங்குவேன்; இவர்களது மதமும் உடமைகளும் எங்கிருந்தாலும், எங்கு காணப்படும் சாத்தியம்
இருந்தாலும், தரையில் அல்லது கடலில் இருந்தாலும், கிழக்கில் அல்லது மேற்கில் இருந்தாலும், என்னையும் என்னைப் பின்பற்றுவோரையும் விசுவாசிகள் மற்றும் முஸ்லிம்களைச் சேர்ந்த எனது மக்களையும் பாதுகாக்கும் அதே வழிமுறையில் அவற்றையும் பாதுகாப்பேன்.


இவர்களை அனைத்துத் தீங்கிலிருந்தும் பாதிப்பிலிருந்தும் விலக்கி எனது பாதுகாப்பில் வைக்கிறேன்; எல்லா விதமான கோரிக்கைகளிலிருந்தும், கடுமையான கட்டுப்பாடுகளிலிருந்தும் விலக்களிக்கிறேன். நானாகவும், என்னைப் பின்பற்றுவோர், எனது உதவியாளர்கள், எனது மார்க்க சமுதாயத்தவர் முதலியோர் மூலமாகவும் இவர்களைப் பாதுகாத்த வண்ணம் இவர்கள் பின்னால் இருப்பேன்.

இவர்கள் மீது அதிகாரம் கொண்டிருப்பவர் என்ற வகையில், எல்லாப் பாதிப்பிலிருந்தும் இவர்களை நான் பாதுகாத்து நிர்வகிக்க வேண்டியுள்ளது; எனக்கும் என்னுடன் இணைந்து இந்த அதிகாரத்தைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள எனது தோழர்களுக்கும் நிகழாத எதுவும் இவர்களுக்கும் நிகழாதிருப்பதை நான் உத்தரவாதப் படுத்த வேண்டும்.


உடன்படிக்கைக்கு உட்பட்டிருக்கும் மக்களை விட்டு, அவர்கள் தாங்களாக கொடுக்கச் சம்மதிப்பது தவிர, வரிகள் மற்றும் கடன் தொடர்பான கடமைப்பாடுகளால் ஏற்படும் தீங்கை விலக்குகிறேன்.


ஒரு மதகுருவை அவரது குருபீடத்திலிருந்தோ, ஒரு கிறிஸ்தவரை அவரது கிறிஸ்தவ மதத்திலிருந்தோ, ஒரு சன்னியாசியை அவரது தவ வாழ்விலிருந்தோ, ஒரு யாத்திரீகரை அவரது யாத்திரையிலிருந்தோ, ஒரு துறவியை அவரது துறவு மாடத்திலிருந்தோ அகற்றுதல் கூடாது; அவர்களது தேவாலயங்களின் எந்தப் பாகத்தையும் இடிப்பதோ, முஸ்லிம்களின் மஸ்ஜிதுகளை அல்லது வீடுகளை நிர்மாணிப்பதற்காக அவர்களது கட்டிடங்களின் பாகங்களைப் பயன்படுத்தவதோ கூடாது. இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் அல்லாஹ்வின் உடன்படிக்கையை முறித்தவராகவும், அவனது தூதருக்குக் கட்டுப்படாதவராகவும், தெய்வீகக் கூட்டணியிலிருந்து வெளியேறியவராகவும் ஆகிவிடுவார்.


துறவிகள் அல்லது பாதிரிகள் மீது -அவர்களாக விரும்பித்தர முற்படுவது தவிர- தலைக்கட்டு வரியோ வேறெந்த வரியோ விதிக்கப்படலாகாது.


பாரிய வர்த்தகர்கள், சுழியோடிகள், ரத்தினக் கற்களையும் தங்கத்தையும் வெள்ளியையும் அகழ்ந்தெடுப்பவர்கள், செல்வந்தர்கள், பலம் படைத்தவர்கள் முதலானோருள் கிறிஸ்தவ மதத்தை தழுவியிருப்பவர்கள் பயணியரல்லாது இந்நாடுகளின் குடிமக்களாக அல்லது குடியேறித் தங்கியிருப்பவர்களாக இருக்கும் காலமெல்லாம் அவர்கள் மீதான வருடாந்த தலைக்கட்டு வரி பன்னிரண்டு திர்ஹமை தாண்டாது.


பிரயாணி அல்லது எங்கு குடியிருப்பவர் என அறியப்படாதவர் நில வரியோ தலைக்கட்டு வரியோ செலுத்த வேண்டியதில்லை. ஆனால் ஆட்சியாளரது நாணய அதிகாரத்திற்கு (Monetary Right) உட்பட்ட நிலமொன்றை ஒருவர் அனந்தரமாகப் பெற்றிருப்பாராயின், அவரும் பிறரைப் போன்று கட்டணம் செலுத்த வேண்டும். எனினும், இத்தகையோரது தாங்கு சக்திக்கு அப்பால் அநீதமாக இக்கட்டணங்கள் உயர்த்தப்படலாகாது.


நிலவுடமையாளர்களது செலவில் உழுது பண்படுத்தப்பட்டு, அறுவடை செய்யப்படும் நிலங்களில் உழைக்கும் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, அவர்களிடம் அதிகப்படியான வரி எதுவும் அறவிடப் படலாகாது; அவர்களைப் போன்ற பிற கிளையார்கள் செலுத்துவதையே அவர்களும் செலுத்துவர்.


முஸ்லிம்களது பாதுகாப்பை சுதந்திரமாக அனுபவிக்கும் முஸ்லிமல்லாதோர் முஸ்லிம்களுடன் இணைந்து எதிரிகளுக்கு முகங் கொடுக்கவோ, அவர்களைத்
தாக்கவோ, சிறைப்பிடிக்கவோ வேண்டியதில்லை. சொல்லப் போனால், சுதந்திரமான இம்முஸ்லிமல்லாதோர் போரில் ஈடுபடப் போவதே இல்லை. இன்னும் துல்லியமாகக் கூறினால், இக்கடமைப்பாட்டிலிருந்து அவர்களை விடுவித்து, முஸ்லிம்களால் அவர்களுக்கு வழங்க முடியுமான உதவியையும் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தவே இவ்வுடன்படிக்கை செய்து தரப்படுகிறது. அவர்கள் சுயாதீனமாக முன்வந்தாலே தவிர, முஸ்லிம்களுடன் இணைந்து எதிரிகளைச் சந்திக்க வெளியேற வேண்டிய கடமைப்பாடு கிடையாது; தங்களது குதிரைகளையோ ஆயுதங்களையோ வழங்க வேண்டிய நிர்ப்பந்தமும் அவர்களுக்கு இல்லை. எனினும், எவர் அவ்வாறு தானாக முன்வருகிறாரோ அவரது செயல் நன்றியோடு ஏற்றுக் கொள்ளப்படும்.

எந்தக் கிறிஸ்தவரும் நிர்ப்பந்தமாக முஸ்லிமாக மாற்றப்பட மாட்டார்: மேலும், வேதக்காரர்களுடன் அழகிய வழிமுறையிலேயன்றி தர்க்கம்
புரியாதீர்கள்(29:46). இரக்கம் என்ற இறக்கையினுள் அவர்கள் அரவணைக்கப்பட வேண்டும்; எங்கிருந்தாலும், எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் அவர்களுக்கு நேரக்கூடிய அனைத்துத் தீங்குகளும் தவிர்க்கப்பட வேண்டும்.


ஒரு கிறிஸ்தவர் குற்றமொன்றை அல்லது தவறொன்றை இழைத்து விட்டால் கூட முஸ்லிம்கள் அவருக்குத் தேவையான உதவியையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டும்; அவரது தவறை மன்னிக்க வேண்டும்; குறித்த தவறால் பாதிக்கப்பட்டவரைக் கூட, மன்னிப்பு மூலமாக அல்லது இழப்பீடு பெற்றுக் கொள்வதன் மூலமாக சமரசம் செய்து கொள்ளத் தூண்ட வேண்டும்.

முஸ்லிம்களுக்கு என்ன நன்மை கிட்டினாலும் அது கிறிஸ்தவர்களுக்கும் கிட்ட வேண்டும் என்ற வகையிலும், முஸ்லிம்களுக்கு என்ன தீங்கு நேர்ந்தாலும் அது கிறிஸ்தவர்களுக்கும் சேர்த்தே என்ற வகையிலும் இவ்வுடன்படிக்கையை நான் -அல்லாஹ்வின் சார்பில்- செய்திருப்பதால், அவர்களை முஸ்லிம்கள் கைவிடவோ புறக்கணிக்கவோ உதவியின்றி விட்டு விடவோ கூடாது. இவ்வுடன்படிக்கையின் அடிப்படையில், எமது பாதுகாப்பை அனுபவிக்கவும், அனைத்து உரிமை மீறல்களிலுமிருந்து பாதுகாக்கப்படவுமான மீறக்கூடாத உரிமைகளை அவர்கள் பெற்றுள்ளனர். அந்த வகையிலேயே, நன்மையிலும் தீமையிலும் அவர்கள் முஸ்லிம்களுடன் பிணைந்திருப்பர்.

கிறிஸ்தவர்கள் விரும்பாத திருமண பந்தங்களுக்கு எவரும் அவர்களைக் கட்டாயப்படுத்தி துன்புறுத்தக் கூடாது. முஸ்லிம்கள் கிறிஸ்தவப் பெண்களை அவர்களது பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்யலாகாது; தங்களது திருமணக் கோரிக்கையை அவர்களது குடும்பங்கள் மறுத்து விட்டால், அதற்காக அவர்களை நெருக்குதலுக்கு உட்படுத்தக் கூடாது. இத்திருமணங்கள் அவர்களது விருப்பமும் உடன்பாடும் ஒப்புதலும் சம்மதமும் இன்றி இடம்பெறலாகாது.


கிறிஸ்தவ யுவதியை மனைவியாக ஏற்றுக் கொள்ளும் ஒரு முஸ்லிம், அவளது கிறிஸ்தவ நம்பிக்கைகளை மதிக்க வேண்டும்; விரும்பியவாறு தனது மதத் தலைவர்களது உரைகளுக்குச் செவிமடுக்கவும், தனது மதத்தைப் பின்பற்றவும் அவளுக்குச் சுதந்திரம் வழங்க வேண்டும்; அம்மதத்தை விட்டு விடுமாறு அவளை நிர்ப்பந்தித்தல் கூடாது. இக்கட்டளைக்கு மாறாக
எவர் தனது மனைவியை அவளது மதத்துக்கு முரணாகச் செயற்படுமாறு கட்டாயப்படுத்துகிறாரோ, அவர் அல்லாஹ்வின் கூட்டணியை முறித்தவராகவும், அவனது தூதர் செய்த உடன்படிக்கைக்கு எதிராக வெளிப்படையாகவே கிளர்ச்சி செய்தவராகவும் மாறுவார்; அல்லாஹ்வும் அவரை மோசடிக்காரருள் ஒருவராகக் கணிப்பான்.


கிறிஸ்தவர்கள் தங்களது தேவாலயங்களையும் கன்னியர் மடங்களையும் திருத்தியமைப்பதற்கு அல்லது தங்களது பிற விவகாரங்களுடன் தொடர்பான விடயங்களை ஒழுங்குபடுத்துவதற்கு முஸ்லிம்களது உதவி ஒத்தாசையை நாடினால், அவர்களுக்கு முஸ்லிம்கள் உதவுவதும் ஆதரவு வழங்குவதும் அவசியம். வெகுமதி எதனையும் பெறும் நோக்கிலல்ல; மாறாக,
இறைத்தூதரின் ஒப்பந்தத்திற்கு விசுவாசமாக அம்மதத்தை மீள நிலைநிறுத்துவதற்காகவும், அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் மெச்சத்தக்க செயல் என்ற வகையிலும் முற்றிலும் இலவசமாக அதனைச் செய்ய வேண்டும்.


முஸ்லிம்களுக்கும் எதிரிகளுக்குமிடையிலான போர் விவகாரங்களில் எந்தக் கிறிஸ்தவரையும் தூதுவராகவோ, ஒற்றராகவோ, வழிகாட்டியாகவோ, உளவாளியாகவோ, வேறெந்த போர்ப் பணியாளர்களாகவோ முஸ்லிம்கள் அமர்த்தக் கூடாது. எவரொருவர் அவர்களுள் ஒருவரை அவ்வாறு செயற்படுமாறு கட்டாயப்படுத்துகிறாரோ அவர் ஓர் அடக்குமுறையாளர்; அல்லாஹ்வின் தூதருக்கெதிராக கிளர்ச்சி செய்பவர்; அவனது ஏற்பாட்டிற்கு மாறு செய்பவர்.

இனி வருபவை அல்லாஹ்வின் தூதராகிய முஹம்மத் கிறிஸ்தவ சமுதாயத்துக்கு அவர்களது மதம் மற்றும் சமூகம் தொடர்பாக முன்வைக்கும் நிபந்தனைகளாகும்.

அவர்கள் இந்த உடன்படிக்கையை பற்றிப் பிடித்திருக்க வேண்டும்; தாம் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டை மதிக்க வேண்டும்.


அவர்களுள் எவரும் போர் விரோதியின் சார்பில் ஒரு முஸ்லிமுக்கெதிராக -வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ- உளவு பார்க்க கூடாது; எதிரிகள் தருணம் பார்த்து முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுக்க வசதியளிக்கும் வகையில் எந்தக் கிறிஸ்தவரும் தங்களது வீடுகளில் அவர்களுக்கு புகலிடம் வழங்கக் கூடாது; தங்களது பிரதேசங்களில் -அவை கிராமங்களாய் இருந்தாலும், செபக் கூடங்களால் இருந்தாலும், தமது மதத்தோழர்களுக்குச் சொந்தமான வேறெந்த இடமாக இருந்தாலும்- எதிரிகள் தரித்திருக்க இடமளிக்கலாகாது; முஸ்லிம்களுடன் போரிடும் எதிரிகளுக்கு -வாழ்த்து வழங்குதல் உட்பட- ஆயுதங்கள், குதிரைகள், ஆளணி முதலிய எந்தத் தளவாடங்களையும் வழங்கி உதவக் கூடாது.


அவர்களுக்கு மத்தியில் தங்கள் கால்நடைகளோடு தரிக்கும் முஸ்லிம்களை மூன்று பகல்களும் மூன்று இரவுகளும் அவர்கள் உபசரிக்க வேண்டும். அம்முஸ்லிம்கள் எங்கு காணப்பட்டாலும், எங்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தாலும், கிறிஸ்தவர்கள் அவர்களுக்கு தாம் அன்றாடம் உண்ணும் உணவிலிருந்து வழங்க வேண்டும். எனினும், அது தவிர்ந்த வேறு சிரமமான அல்லது கடுமையான சுமை எதையும் அவர்கள் ஏற்ற வேண்டிய கடமைப்பாடு கிடையாது.

அவர்களது வீடொன்றில் அல்லது செபக் கூடமொன்றில் ஒரு முஸ்லிம் ஒளிந்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டால், அவர் தரித்திருக்கும் நேரம் முழுவதும் உணவும் உபசரிப்பும் வழிகாட்டலும் வழங்க வேண்டும்; அவரது அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கும் அதேவேளை, அவரை மறைத்து வைத்திருக்கவும், எதிரிகள் அவரைக் கண்டு பிடிக்காமல் தடுக்கவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.


எவர் இச்சாசனத்தின் விதிகளுக்கு மாறு செய்கிறாரோ அல்லது அவற்றை மாற்றுகிறாரோ அவர் அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனுமான கூட்டணியிலிருந்து வெளியேற்றப்படுவார்.


வேதக்காரரைச் சேர்ந்த அரசர்களோடும் துறவிகளோடும் கிறிஸ்தவர்களோடும் நான் ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்படிக்கைகளையும் கூட்டணிகளையும் அனைவரும் ஏற்றுக் கட்டுப்படுவார்களாக! அவ்வாறே, ஒவ்வொரு தூதரும் தனது சமுதாயத்தவரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், உத்தரவாதப்படுத்தும் வகையிலும் அவர்கள் தொடர்பாக ஏற்றுக் கொண்ட பொறுப்புகளை அனைவரும் மதிப்பார்களாக!

அல்லாஹ்வின் நாட்டப் பிரகாரம் மீளெழும் நாள் தோன்றும் வரை இது மீறப்படவோ மாற்றப்படவோ கூடாது.


கிறிஸ்தவர்களது எழுத்துமூல வேண்டுகோளுக்கிணங்க இறைத்தூதர் முஹம்மதினால் வரையப்பட்ட இவ்வாவணம் பின்வருவோரால் சாட்சியம் அளிக்கப்பட்டது:

அபூ பக்கர் அஸ்-ஸித்தீக்; உமர் இப்னுல் ஃகத்தாப்; உஸ்மான் பின் அஃப்பான்; அலீ பின் அபீ தாலிப்; முஆவியா பின் அபீ ஸுப்யான்; அபூ அல் தர்தா; அபூ
தர்; அபூ ஹுறைறா; அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்; அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்; ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப்; அல்-ஃபழ்ல்; ஸெய்த் பின் தாபித்; அப்துல்லாஹ் பின் ஸெய்த்; ஹர்புஸ் பின் ஸெய்த்; அஸ்-ஸுபைர் இப்னுல் அவ்வாம்; ஸஅத் பின் முஆத்; தாபித் பின் கைஸ்; உஸாமா பின் அபீ றபீஆ; ஹஸ்ஸான் பின் தாபித், ஜஅஃபர் பின் அபீ தாலிப்; இப்னுல் அப்பாஸ்; தல்ஹா பின் அப்தில்லாஹ்; ஸஅத் பின் உபாதா; ஸெய்த் பின் அர்கம்; ஸஹ்ல் பின் பைதா; தாவூத் பின் ஜுபைர்; அபுல் ஆலியா; அபூ அஹ்ரிபா; இப்னு உஸைர்; ஹாஷிம் பின் அஸிய்யா; உமர் பின் யமீன்; கஅப் பின் மாலிக்; கஅப் பின் கஅப். (இவர்கள் அனைவரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!)
இது ஹிஜ்ரி நான்காம் வருடத்தின் நான்காம் மாத நிறைவில் திங்களன்று இறைத்தூதர் சொல்ல முஆவியா பின் அபீ ஸுஃப்யானால் மதீனாவில் எழுதப்பட்டது.


இவ்வாவணத்தின் உள்ளடக்கத்திற்கு சான்று பகர அல்லாஹ் போதுமானவன். சர்வ புகழும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே!

அத்தியாயம் 5:


தூதர் முஹம்மத்

உலகளாவிய கிறிஸ்தவர்களுடன்

செய்த உடன்படிக்கை

(கெய்ரோ கையெழுத்துப்படி)


[ஆக்கம்: தூதர் முஹம்மத்]


அல்லாஹ்வின் பெயரால். அவன் படைப்பாளன்; நித்திய ஜீவன்; பேசுபவன்; படைப்பினங்கள் மாண்ட பிறகும் நிலைத்திருப்பவன்.


இது முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் அப்துல் முத்தலிபினால் அனைத்து கிறிஸ்தவர்களுக்குமாக எழுதப்பட்ட உடன்படிக்கையின் நகல்.


உடன்படிக்கை நகல்:


அல்லாஹ்வின் இவ்வுடன்படிக்கை இறைத்தூதர் முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் அப்துல் முத்தலிபின் (அல்லாஹ்வின் சாந்தியும் அருளும் அவர் மீதும் குடும்பத்தார் மீதும் உண்டாவதாக!) கட்டளைப் பிரகாரம் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் துறவிகளுக்குமாக அவர்களை பாதுகாக்கும் பொருட்டு எழுதப்பட்டது; அவர்கள் அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ள அவனது படைப்புகளைச் சேர்ந்தவர்கள். இவ்வுடன்படிக்கை அவர்களுக்கான நிரூபணமாக அமைவதோடு, தூதரின் வருகைக்குப் பிறகு அல்லாஹ்விடம் போலிக் காரணம் எதுவும் முன்வைக்கப்படுவதை செல்லுபடியற்றதாகவும் ஆக்கிவிடும். இதனை அவர் தனது புறத்திலிருந்தான பாதுகாப்பாகவும், அல்லாஹ்வின் ஆணையினால் அவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பாகவும் ஆக்கியுள்ளார்; அல்லாஹ் சர்வ வல்லமையும் ஞானமும் மிக்கவன்.

கிழக்கு நிலங்களிலும், மேற்காகவும், அருகிலும், தூரத்திலும், அரபியராகவும் அரபியல்லாதோராகவும், அறிமுகமானோராகவும், அறிமுகமற்றோராகவும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி வாழ்கின்ற அனைவருக்குமானதோர் உடன்படிக்கையாகவும் நீதியாகவும் பேணிக் காக்கப்பட வேண்டிய மரபாகவும் இது வரையப்பட்டுள்ளது.

இதனை பேணிப் பாதுகாப்பவர் தனது இஸ்லாத்தை பற்றிப் பிடித்தவராகவும், தனது மார்க்கத்துக்கு அருகதை உள்ளவராகவும் இருப்பார்; இதனை முறித்து,
அல்லாஹ்வின் தூதரால் ஆணையிடப்பட்ட உடன்படிக்கையை சீர்குலைத்து, மாற்றியமைத்து, அதில் ஏவப்பட்டுள்ளதை மீறி நடந்து கொள்பவர், அல்லாஹ்வின் உடன்படிக்கையை நிராகரித்தவராவார்; அவனது பிரமாணத்தை மறுத்து, மார்க்கத்தை அலட்சியம் செய்தவராவார்; அவனது சாபங்களுக்கும் ஆளாவார்- அவர் அதிகாரம் படைத்தவராகவோ, விசுவாசிகளையும் முஸ்லிம்களையும் சேர்ந்த வேறெவராகவோ இருந்தாலும் சரியே!


நான் உடன்படிக்கைக்கு இயைபாக நடக்க தொடங்கி விட்டேன்; என்னிடமும் எனது முழு முஸ்லிம் சமுதாயத்திடமும் இருந்து கூட்டணிகளையும் உறுதிமொழிகளையும் கோரியவர்களுக்கு அவற்றை வழங்கி விட்டேன்; அல்லாஹ்வின் உடன்படிக்கையையும் அவனது உறுதிமொழியையும் அவர்களுக்குத் தந்து விட்டேன்; அவனது தூதர்களதும், அவனால் தெரிவு செய்யப்பட்டோர்களதும், காலங்காலமாக விசுவாசிகளிலும் முஸ்லிம்களிலும் உள்ள அவனது நண்பர்களதும் பாதுகாப்பின் கீழ் அவர்களை ஆக்கி விட்டேன். எனது பாதுகாப்பும் காவலுமே கட்டுப்படவும்,
கடப்பாடுகளை ஏற்கவும், ஒப்பந்தத்தை மதிக்கவும் கோரும் வகையில் மாட்சிமை நிறைந்த அல்லாஹ்வினால் சத்தியத்தூதர் ஒருவருக்கு அருளப்பட்ட திடமான உடன்படிக்கையொன்றை பிரதிநிதித்துவம் செய்கிறது. அல்லாஹ்வின் இவ்வுடன்படிக்கையின் பிரகாரம், அவர்களது நிலங்களையும், துறவியர் மடங்களையும் -அவை எங்கிருந்தாலும், தூரத்தில் இருந்தாலும் அருகில் இருந்தாலும்- எனது அதிகாரம், எனது புரவிகள், எனது மக்கள், எனது ஆயுதங்கள், எனது பலம், என்னைப் பின்பற்றும் முஸ்லிம்கள் முதலிய அனைத்து வளங்களையும் கொண்டு பாதுகாப்பேன்; அவர்களது தொழில் நடவடிக்கைகளையும் பாதுகாப்பேன். அவர்களும், அவர்களது ஆலயங்களும், அவர்களது தொழில்களும், அவர்களது வணக்கஸ்தலங்களும், அவர்களது துறவியர் மடங்களும், அவர்களது யாத்திரைத் தலங்களும் -எங்கு காணப்பட்டாலும், மலைகளில் அல்லது பாலைவனத்தில் காணப்பட்டாலும்- பாதுகாப்பு வழங்குவேன்; அவர்களது சமூகம், அவர்களது நம்பிக்கை, அவர்களது மதம் என்பன கிழக்கில் அல்லது மேற்கில் இருந்தாலும், கடலில் அல்லது தரையில் இருந்தாலும், என்னையும் என்னோடிருப்போரையும், முஸ்லிம்களைச் சேர்ந்த என் சமூகத்தாரையும் பாதுகாக்கும் அதே முறையில் பாதுகாப்பேன்.


எல்லா நேரமும் எனது பாதுகாப்பிலும் பொறுப்பிலும் அவர்களை வைக்கிறேன். எத்தகைய தீங்கிலிருந்தும் பாதிப்பிலிருந்தும் பழிவாங்கலிலிருந்தும் அவர்களைப் பாதுகாப்பேன்; எல்லா எதிரிகளிடமிருந்தும், அவர்களுக்குத் தீங்கு நேர நாடுவோரிடமிருந்தும் பாதுகாத்த வண்ணம் அவர்களின் பின்னால் நிற்பேன்; எனது உதவியாளர்கள், என்னைப் பின்பற்றுவோர், எனது சமூகத்தைச் சேர்ந்தோர் முதலிய அனைவரையும் கொண்டு என்னை அவர்களுக்காக அர்ப்பணிக்கிறேன்; ஏனெனில் அவர்கள் எனது கூட்டத்தார்; எனது பாதுகாப்பில் இருப்பவர்கள். எந்தத் தீங்கும் அவர்களை அணுகாதவாறு எனது அதிகாரத்தையும் அக்கறையையும் பாதுகாப்பையும் நான் விஸ்தரிக்கிறேன்; அவர்களுக்குப் பாதுகாப்பாகவும் இஸ்லாத்துக்கு உதவியாகவும் இருக்கின்ற எனது தோழர்களுக்கு நேராத எந்தத் தீங்கும் அவர்களுக்கு நேரப் போவதில்லை.


உடன்படிக்கைக்கு உட்பட்டிருக்கும் மக்கள், தாங்களாக வழங்கச் சம்மதிப்பது தவிர, வரிகள் மற்றும் கடன் தொடர்பான கடமைப்பாடுகளால் ஏற்படக்கூடிய தீங்கை அவர்களை விட்டு அகற்றுகிறேன். இவ்விடயத்தில் அவர்கள் நிர்ப்பந்திக்கப் படவோ நியாயமின்றி நடாத்தப்படவோ கூடாது.

ஒரு மதகுருவை அவரது குருபீடத்திலிருந்தோ, ஒரு சன்னியாசியை அவரது தவ வாழ்விலிருந்தோ, ஒரு கிறிஸ்தவரை அவரது கிறிஸ்தவ மதத்திலிருந்தோ, ஒரு துறவியை அவரது துறவு மாடத்திலிருந்தோ, ஒரு யாத்திரீகரை அவரது யாத்திரையிலிருந்தோ அகற்றுதல் கூடாது; அவர்களது தேவாலயங்களின் அல்லது தொழிலகங்களின் எந்தப் பாகத்தையும் தகர்ப்பதோ, மஸ்ஜிதுகளை அல்லது விசுவாசிகளான முஸ்லிம்களது வீடுகளை நிர்மாணிப்பதற்கு அவர்களது கட்டிடங்களின் பாகங்களைப் பெறுவதோ கூடாது. எவர் அத்தகைய செயலைப் புரிகிறாரோ, அவர் அல்லாஹ்வின் உடன்படிக்கையை மீறியவராகவும், அவனது தூதருக்குக் கட்டுப்படாதவராகவும், அவனது தெய்வீகக் கூட்டணியிலிருந்து பிறழ்ந்தவராகவும் மாறுவார்.


துறவிகள் அல்லது மதகுருக்கள் அல்லது கம்பளி அணிந்து வணக்கத்தில் திளைத்திருக்கும் பக்தர்கள் அல்லது ஏகாந்தமாய் மலைகளில் வசித்திருப்போர் அல்லது மனித சஞ்சாரமற்ற வேறு பகுதிகளில் வாழ்ந்து வருவோர் மீது தலைக்கட்டு வரியோ வேறு வகையான நிலவரியோ விதிக்கப்படலாகாது.


மலைமீது வசிக்கும் துறவி மற்றும் யாத்திரீகர் தவிர்ந்த, மதகுருவல்லாத கிறிஸ்தவர்களிடமிருந்து வருடத்திற்கு நான்கு திர்ஹம் அல்லது அதிக செலவில்லாத அங்கியொன்று தலைக்கட்டு வரியாக அறவிடப்படும். பணம் இல்லாதவருக்கு அல்லது உண்ண உணவில்லாதவருக்கு முஸ்லிம்கள் திறைசேரியின் சேமிப்பிலிருந்து கொடுத்துதவுவர்; உணவைப் பாதுகாக்க சிரமப்படுவோருக்கும் -அவர்கள் மனமொப்பி ஏற்கும் பட்சத்தில்- முஸ்லிம்கள் உதவி புரிவர்.


கிறிஸ்தவ நம்பிக்கையை தழுவியிருப்போருள் தரையிலோ கடலிலோ வணிகம் செய்வோர், முத்துக் குளிப்போர், ரத்தினக் கற்களையும் தங்கத்தையும்
வெள்ளியையும் அகழ்ந்தெடுப்போர், செல்வந்தராய் இருப்போர் முதலியோர் – இந்நாடுகளின் குடிமக்களாக அல்லது அவற்றில் குடியேறி வாழ்வோராக இருக்கும் காலமெல்லாம்- அவர்கள் மீதான வருடாந்த நிலவரி பன்னிரண்டு (வெள்ளி) திர்ஹமுக்கு மேற்படாததாக இருக்கட்டும்.
நாட்டில் தங்கியிராத பயணிகளிடமும், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என அறியப்படாத வழிப்போக்கர்களிடமும் அத்தகைய எதுவும் அறவிடப்படாது.

நில உரிமையாளர்களையும், ஆட்சியாளரின் நில எல்லைக்குள் குடியிருப்போரையும் தவிர்ந்த பிறரிடம் தலைக்கட்டு வரியுடன் நிலவரியும் அறவிடப்படாது; அவர்களும் பிறரைப் போன்றே வரிசெலுத்துவராயினும், அவர்களது தாங்கு திறனை மீறிய வகையிலான நியாயமற்ற கட்டணங்களாக அது அமையக் கூடாது.

நிலவுடமையாளர்களது செலவில் உழுது பண்படுத்தப்பட்டு, அறுவடை செய்யப்படும் நிலங்களில் உழைக்கும் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, அவர்களிடம் அதிகப்படி வரியெதுவும் அறிவிடப்படாது. அவர்களைப் போன்ற பிற கிளையார்கள் மீது அமல் படுத்தப்படுவது போன்றே அவர்களும் நியாயமான முறையில் வரி செலுத்துவர்.

எமது பாதுகாப்பின் கீழ் இருக்கும் (அஹ்லு அல்-திம்மா) முஸ்லிமல்லாதோர் முஸ்லிம்களுடன் இணைந்து எதிரிகளுக்கு முகம் கொடுக்கவோ அவர்கள் மீது தாக்குதல் தொடுக்கவோ செல்ல வேண்டிய கடமைப்பாடு இல்லை. உண்மையில், எமது பாதுகாப்பின் கீழ் இருக்கும் மக்கள் (அஹ்ல் அல்- திம்மா) போரில் ஈடுபட வேண்டியர்களும் அல்லர். சொல்லப் போனால், அவர்களை இக்கடமைப்பாட்டிலிருந்து விடுவித்து, முஸ்லிம்களால் வழங்க முடியுமான உதவியையும் பாதுகாப்பையும் உத்தரவாதப் படுத்துவதற்காகவே இவ்வுடன்படிக்கை அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

முஸ்லிம்கள் தமது எதிரிகளை தாக்கச் செல்லும் போரின் போது, கிறிஸ்தவர்கள் அதற்குப் பங்களிப்புச் செய்ய தாங்களாக முன்வந்தாலே தவிர, எந்த முஸ்லிமுக்கும் ஆயுதங்களாகவோ குதிரைகளாகவோ போர்த் தளவாடங்களை வழங்குமாறு நிர்ப்பந்திக்கப்பட மாட்டார்கள். மட்டுமன்றி, முஸ்லிம்கள் அவர்களிடம் இரவலாக பெற்றுக் கொண்டதை திருப்பி ஒப்படைக்கும் வரை (அரச) திறைசேரி அதற்கு உத்தரவாதம் வழங்கும்; அவை அழிந்து விட்டால் அல்லது சேதமடைந்து விட்டால் திறைசேரி அதற்கு பண ரீதியான இழப்பீட்டை வழங்கும்.


கிறிஸ்தவ மதத்தை அப்பியாசம் செய்யும் எவரும் இஸ்லாத்தில் நுழையுமாறு கட்டாயப்படுத்தப்பட மாட்டார். மேலும், வேதக்காரர்களுடன் அழகிய வழிமுறையிலேயன்றி தர்க்கம் புரியாதீர்கள் (29:46). இரக்கம் என்ற இறக்கையால் அவர்கள் அரவணைக்கப்பட வேண்டும்; அவர்கள் எங்கிருந்தாலும், எங்கு காணப்படும் சாத்தியம் இருந்தாலும் அங்கெல்லாம் அவர்களை வந்தடையக் கூடிய அனைத்துத் தீங்குகளும் தடுக்கப்பட வேண்டும்.


ஒரு கிறிஸ்தவர் ஒரு குற்றத்தை அல்லது தவறை இழைத்துவிட்டால் கூட முஸ்லிம்கள் அவருக்கு உதவியும் காவலும் பாதுகாப்பும் வழங்க வேண்டும்; அதற்கான அபராதத்தை அவருக்காக தாங்களே செலுத்த வேண்டும்; அவருக்கு உதவும் பொருட்டு அல்லது அவரை காப்பாற்றும் பொருட்டு அவருக்கும் பாதிக்கப் பட்டவருக்கும் இடையில் இணக்கப்பாட்டைத் தூண்ட வேண்டும்; முஸ்லிம்கள் அவரை உதவியோ ஆதரவோ இன்றி விட்டுவிடக் கூடாது; ஏனெனில் முஸ்லிம்கள் செயற்படுத்தக் கடமையான அல்லாஹ்வின் உடன்படிக்கை ஒன்றை கிறிஸ்தவர்களுக்கு நான் வழங்கியுள்ளேன்.


இந்த ஒப்பந்தத்தின்படி, எமது பாதுகாப்பை அனுபவிக்கவும், எல்லா வகையான உரிமை மீறல்களிலிருந்து பாதுகாக்கப்படவுமான மீறப்பட முடியாத உரிமைகளை அவர்கள் பெற்றுள்ளனர். நன்மையிலும் தீமையிலும் அவர்கள் முஸ்லிம்களுடன் பிணைந்திருக்க கடமைப்பட்டிருப்பதால், அந்த உரிமைகள்
கேள்விக்கு உட்படுத்தப்படவோ நிராகரிக்கப்படவோ புறக்கணிக்கப்படவோ முடியாது.


கிறிஸ்தவ யுவதிகளை அவர்கள் விரும்பாத திருமணங்களுக்கு உட்படுத்தி எவரும் துன்புறுத்தலாகாது. முஸ்லிம்கள் கிறிஸ்தவ யுவதிகளை அவர்களது பெற்றோரின் விருப்பத்திற்கு முரணாக திருமணம் செய்யவோ, தங்களது திருமண முன்மொழிவையும் கோரிக்கையையும் அவர்களது குடும்பம் நிராகரிக்கும் பட்சத்தில் அவர்களை நெருக்குவாரப்படுத்தவோ கூடாது. இவ்வாறான திருமணங்கள் அவர்களது விருப்பமும் உடன்பாடும் ஒப்புதலும் சம்மதமும் இன்றி இடம்பெறலாகாது.


ஒரு முஸ்லிம் ஒரு கிறிஸ்தவ யுவதியைத் திருமணம் செய்தால் அவளது கிறிஸ்தவ நம்பிக்கைகளை மதிக்க வேண்டும்; அவள் விரும்பியவாறு அவளது மதத்தலைவர்களது உரைகளுக்குச் செவிமடுக்கவும், அவளது மதத்தைப் பின்பற்றவும் சுதந்திரம் வழங்க வேண்டும். எவர் இக்கட்டளைக்கு மாற்றமாக, தனது (கிறிஸ்தவ) மனைவியை அவளது மதத்திற்கு முரணாகச் செயற்பட நிர்ப்பந்திக்கிறாரோ அவர் அல்லாஹ்வின் கூட்டணியை உடைத்தவராவார்; அவனது தூதரின் வாக்குறுதியை முறித்தவராவார்; பொய்யர்களுள் ஒருவராக அவரை நாம் கணிப்போம்.


கிறிஸ்தவர்கள் தங்களது தேவாலயங்களையும், கன்னியர் மடங்களையும் திருத்தியமைப்பதற்கு அல்லது தங்களது மத மற்றும் பிற விவகாரங்களுடன் தொடர்புபட்ட விடயங்களை ஒழுங்குபடுத்துவதற்கு முஸ்லிம்களது உதவியையும் ஒத்துழைப்பையும் நாடிவந்தால், அவர்களுக்கு (முஸ்லிம்களாகிய) இவர்கள் உதவியும் ஒத்தாசையும் வழங்க வேண்டும். ஏதாவது வெகுமதியை அல்லது கடனை எதிர்பார்த்து இவர்கள் அதனை செய்யக் கூடாது; மாறாக, இறைத்தூதரின் ஒப்பந்தத்திற்கு விசுவாசமாக, அம்மதத்தை மீளமைக்கும் நோக்குடனும், அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் மெச்சத்தக்க செயல் என்ற வகையிலும் முற்றிலும் இலவசமாகவே அதனைச் செய்ய வேண்டும்.


முஸ்லிம்களுக்கும் எதிரிகளுக்கும் இடையிலான போர் விவகாரங்களில் முஸ்லிம்கள் எந்தக் கிறிஸ்தவரையும் தூதுவராகவோ, வழிகாட்டியாகவோ, பலத்தை வெளிக்காட்டுவதற்காகவோ, வேறெந்த போர்ப் பணிக்காகவோ ஈடுபடுத்தக் கூடாது. எவர் இவ்வாறானதொரு விடயத்தைச் செய்வதற்கு அவர்களுள் ஒருவரை கட்டாயப்படுத்துகிறாரோ, அவர் அல்லாஹ்வின் முன் அநீதமானவராகவும், அவனது தூதருக்கு கட்டுப்படாதவராகவும் மாறுவதோடு, அவரது மார்க்கத்திலிருந்தும் வெளியேற்றப் படுவார். கிறிஸ்தவர்களின் மதம் தொடர்பாக இறைத்தூதரான முஹம்மத் பின் அப்துல்லாஹ் ஏற்படுத்தியுள்ள இவ்வாணைகளுக்கு கட்டுப்படுவதற்கப்பால் ஒரு முஸ்லிமுக்கு (கிறிஸ்தவர்கள் தொடர்பாக) வேறெதுவும் அனுமதிக்கப் பட்டதல்ல.


நான் (கிறிஸ்தவர்களுக்கும்) சில நிபந்தனைகளை இடுகிறேன்; அவர்களது மதம் கட்டளையிடுவது போன்று, அவற்றை நிறைவேற்ற அவர்கள் வாக்குறுதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். போரெதிரியின் சார்பில் எந்த முஸ்லிமுக்கெதிராகவும் அவர்களுள் எவரும் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ உளவு பார்க்கக் கூடாது என்பது அந்நிபந்தனைகளுள் ஒன்று. முஸ்லிம்களது எதிரிகள் தருணம் பார்த்து தாக்குதல் தொடுக்க வசதியளிக்கும் வகையில் எந்தக் கிறிஸ்தவரும் தமது வீடுகளில் அவர்களுக்கு புகலிடம் அளிக்கக் கூடாது; தங்கள் பிரதேசங்களில் -அவை கிராமங்களாய் இருந்தாலும், செபக் கூடங்களாய் இருந்தாலும், தங்களது மதத் தோழர்களுக்குச் சொந்தமான வேறெந்த இடமாக இருந்தாலும் – எதிரிகள் தரித்திருக்க இடமளிக்கலாகாது; முஸ்லிம்களது யுத்த விரோதிகளுக்கு ஆயுதங்கள் அல்லது குதிரைகள் அல்லது ஆளணி போன்ற போர்த்தளவாடங்களை வழங்கி ஆதரவளிப்பதோ, அநாவசியமான விடயங்களுக்காக அழைப்பு விடுப்பதோ கூடாது; முஸ்லிம்களை தொந்தரவுக்கு உட்படுத்தக் கூடாது; அவர்கள் தங்களது மார்க்கத்தில் திடமாக நின்று, தங்களது ஒப்பந்தத்தைப் பேணிக் காக்கும் காலமெல்லாம் அவர்களை இவர்கள் கண்ணியப்படுத்த வேண்டும். முஸ்லிம்கள் அவர்களுக்கு மத்தியில் தங்க நேரும்
சந்தர்ப்பத்தில், மூன்று பகல்களும் மூன்று இரவுகளும் உபசரிக்க வேண்டும்; அவர்கள் எங்கு காணப்பட்டாலும், எங்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தாலும்,
தாம் அன்றாடம் உண்ணும் அதே உணவை அவர்களுக்கும் வழங்க வேண்டும்; எனினும், சிரமமான அல்லது கடுமையான வேறெந்தச் சுமையையும் ஏற்க வேண்டிய கடமைப்பாடு அவர்களுக்குக் கிடையாது.


அவர்களது வீடொன்றில் அல்லது செபக் கூடமொன்றில் ஒரு முஸ்லிம் மறைந்திருக்க நேர்ந்தால், அங்கு தங்கியிருக்கும் நேரம் முழுவதும் அவருக்கு அவர்கள் உதவியும் உபசரிப்பும் உணவும் வழங்க வேண்டும்; அவரது எல்லா தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கும் அதேவேளை, அவரை மறைத்து வைக்கவும், எதிரிகளால் கண்டு பிடிக்கப்படுவதைத் தடுக்கவுமான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.


எவர் இச்சாசனத்தின் விதிகளுக்கு மாறுசெய்கிறாரோ அல்லது அவற்றை மாற்றுகிறாரோ அவர் அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனுமான கூட்டணியிலிருந்து வெளியேற்றப்படுவார்.


மதத்துறவிகளுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகளையும் கூட்டணிகளையும், நான் ஏற்படுத்திக் கொண்டுள்ள இந்த ஒப்பந்தத்தையும்
அனைவரும் -அவர்கள் எங்கிருந்தாலும்- ஏற்றுக் கட்டுப்படுவார்களாக! யுகம் முடிவடைந்து மறுமை தோன்றும் வரை அவர்களைப் பாதுகாக்கவும்
அவர்கள் மீது அன்பு கூரவுமாக அல்லாஹ்வின் தூதர் (அன்னார் மீது அல்லாஹ்வின் சாந்தியும் அருளும் உண்டாவதாக!) தனது சார்பாகவும் அனைத்து முஸ்லிம்கள் சார்பாகவும் அவர்களுக்கு வழங்கியிருப்பதை அனைவரும் மதிக்க வேண்டும்.


எவர் இதன் பிறகு ஒரு (கிறிஸ்தவ) குடிமகனின் (திம்மீ) விடயத்தில் நியாயமின்றி நடந்து கொள்கிறாரோ, அவர் இவ்வுடன்படிக்கையை முறித்து அதனை நிராகரிக்கிறார். தீர்ப்பு நாளில் அனைத்து முஸ்லிம்களுக்கும் மத்தியில் நான் அவருக்கு விரோதியாக இருப்பேன்.


அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் பின் அப்துல்லாஹ்வினால் (அல்லாஹ்வின் சாந்தியும் அருளும் அன்னார் மீது உண்டாவதாக!) அனைத்து கிறிஸ்தவர்களுக்குமாக அவர்களுக்குரிய நிபந்தனைகளையும் உள்ளிட்டு- எழுதப்பட்ட இவ்வுடன்படிக்கைக்கு முப்பது பேர் சாட்சியாக இருந்தனர்:


அபூ பக்கர் அஸ்-ஸித்தீக்; உமர் இப்னுல் கத்தாப்; உஸ்மான் பின் அப்பான்; அலீ பின் அபீ தாலிப்; அபூ தர்; அபூ அல்-தர்தா; அபூ ஹுறைறா; அப்துல்லாஹ்
பின் மஸ்ஊத்; அல்-அப்பாஸ் பின் அப்துல் மலிக்; ஃபழ்ல் இப்னுல் அப்பாஸ் அல்-ஸஹ்ரீ; தல்ஹா பின் அப்தில்லாஹ்; ஸஅத் பின் முஆத்; ஸஅத் பின் உபாதா; தாபித் பின் கைஸ்; யஸீத் பின் தாலித்; அப்துல்லாஹ் பின் யஸீத்; ஃபர்ஸுஸ் பின் காஸிம் பின் பத்ர் பின் இப்றாஹிம்; ஆமிர் பின் யஸீத்; ஸஹ்ல் பின் தமீம் அப்துல் அழீம் பின் அந்-நஜாஷீ; (வித்தியாசமான கையெழுத்து); அப்துல் அழீம் பின் ஹுஸைன்; அப்துல்லாஹ் பின் அம்ர் இப்னுல் ஆஸ்; அம்ர் பின் யாஸிர்; முஆஸிம் பின் மூஸா; ஹஸ்ஸான் பின் தாபித்; அபூ ஹனீஃபா; உபைத் பின் மன்ஸுர்; ஹாஷிம் பின் அப்துல்லாஹ்; அபூ அல்-ஆஸர்; ஹிஷாம் பின் அப்துல் முத்தலிப்.


அலீ பின் அபீ தாலிப் (அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்வானாக!) இவ்வுடன்படிக்கையை பதிவு செய்தார்.

இக்கையெழுத்துப்படி ஓரளவு பெரிய தோலின் மீது எழுதப்பட்டுள்ளது. ஸுல்தானின் அதிகாரத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த இதில் இறைத்தூதரினால் முத்திரையிடப்பட்டிருந்தது (அன்னார் மீது சாந்தியும் அருளும் உண்டாவதாக!) சர்வ புகழும் அல்லாஹ்வுக்கே!


அருள்பாலிக்கப்பட்ட இப்பனுவல் ஹிஜ்ரி 945 ஆம் வருடம் முஹர்ரம் மாதம் 27ஆம் நாள் திங்கட்கிழமை நிறைவு செய்யப்பட்டது. அல்லாஹ் இதன் முடிவை நல்லதாக்கி வைக்கட்டும்! அருள் பாலிக்கப்பட்ட இப்பனுவல் மகாத்மாவும் தலைவரும் எஜமானரும் சான்றவரும் அறிஞருமான அல்-பறல்லூஸி என அறியப்படும் மேதகு ஃபழ்லுல்லாஹ் என்பவருக்குச் சொந்தமானது.

அத்தியாயம் 6:


தூதர் முஹம்மத்

அஸிரிய கிறிஸ்தவர்களுடன் செய்த உடன்படிக்கை

நான் செய்ய வேண்டியதை அல்லாஹ் ஒரு கனவில் எனக்கு அறிவித்திருக்கிறான்; இந்த உடன்படிக்கையை பேணிக் காப்பதாக வாக்குறுதி வழங்குவதன் மூலமாக அவனது ஆணையை ஏற்கிறேன்.


இஸ்லாத்தைப் பின்பற்றுவோருக்கு நான் கூறுவது இதுதான்:


எனது கட்டளையை செயற்படுத்துங்கள்; நமது இந்த நாட்டில் தங்களது சொந்த நிலங்களில் வாழும் நஸரேயர்களுக்கு உதவுங்கள்; அவர்களது வணக்கஸ்தலங்களை அமைதியாக விட்டு விடுங்கள்; அவர்களது தலைவருக்கும் மதகுருக்களுக்கும் உதவி தேவைப்படும்போது -அவர்கள் மலைகளில் அல்லது பாலைவனத்தில் அல்லது கடலில் அல்லது வீடுகளில் இருந்தாலும்- உதவியும் சகாயமும் அளியுங்கள்.


குதிரைகளாய் இருந்தாலும் வேறு செல்வங்களாய் இருந்தாலும் அவர்களது உடமைகளை அவற்றின் பாட்டுக்கு விட்டு விடுங்கள்; அவர்களின் சொத்துகளில் எதனையும் அழிக்காதீர்கள். இஸ்லாத்தை பின்பற்றுவோர் இந்த தேசத்திலுள்ள எவருக்கும் தீங்கிழைக்கவோ தொந்தரவு ஏற்படுத்தவோ மாட்டார்கள்; ஏனெனில் நஸரேயர்கள் எனது குடிமக்கள்; எனக்கு வரி செலுத்துபவர்கள்; முஸ்லிம்களுக்கு உதவ இருப்பவர்கள்.


உடன்பாடு காணப்பட்ட தொகை தவிர வேறெந்த வரியும் அவர்களிடமிருந்து
அறவிடப்படக் கூடாது. அவர்களது தேவாலயக் கட்டிடங்கள் மாற்றியமைக்கப் படாமல் உள்ளது உள்ளவாறே விட்டு வைக்கப்பட வேண்டும்; அவர்களது மதகுருக்கள் தங்களது வழிமுறையில் போதனை புரியவும் வணக்கத்தில் ஈடுபடவும் அனுமதிக்கப்பட வேண்டும்; கிறிஸ்தவர்கள் தங்களது தேவாலயங்களிலும் வீடுகளிலும் வழிபாட்டில் ஈடுபட அவர்களுக்குப் பூரண சுதந்திரம் உண்டு.


நஸரேயர்களது ஒப்புதலும் சுதந்திர நாட்டமும் இன்றி அவர்களது எந்த
தேவாலயமும் தகர்க்கப்படவோ மஸ்ஜிதாக மாற்றப்படவோ கூடாது. எவராவது இக்கட்டளைக்குப் பணிய மறுப்பாராயின், அவர் அல்லாஹ்வினதும் அவனது தூதரதும் கோபத்துக்கு ஆளாவார்.


நஸரேயர்களால் செலுத்தப்படும் வரி இஸ்லாத்தின் போதனைகளைப் பரப்பவும், பைத்துல் மால்என்னும் திறைசேரியில் இட்டு
வைக்கவும் பயன்படுத்தப் படும். அந்தவகையில், ஒரு சாதாரண மனிதர் ஒரு தீனார் செலுத்த வேண்டும்; வர்த்தகர்களும், தங்க மற்றும் வெள்ளிச் சுரங்க உரிமையாளர்களும், செல்வந்தர்களும் பன்னிரண்டு தீனார் செலுத்த வேண்டும். எனினும் பிற தேசத்தவர்களும், வீடோ வேறு அசையாச் சொத்தோ இல்லாதிருப்பவர்களும் வரி செலுத்த வேண்டியதில்லை; ஒரு மனிதர் அனந்தரமாக சொத்தொன்றைப் பெறுவாராயின், அதற்கெனத் தீர்மானிக்கப்பட்ட தொகையொன்றை திறைசேரிக்கு வழங்க வேண்டும்.


இஸ்லாத்தின் எதிரிகளோடு யுத்தம் புரிவது கிறிஸ்தவர்களுக்குக் கடமையில்லை. எனினும் எதிரிகள் கிறிஸ்தவர்களைத் தாக்கும் போது முஹம்மதியர்கள் அவர்களுக்கு உதவ மறுக்கக் கூடாது; தேவைப்படுமாயின், குதிரைகளையும் ஆயுதங்களையும் வழங்கி அவர்களுக்கு உதவுவதோடு, புறத்தேயிருந்து வரும் தீங்குகளை விட்டு அவர்களைப் பாதுகாத்து அமைதி பேண வேண்டும். அல்லாஹ் தன் நாட்டப்படி கிறிஸ்தவர்களை விசுவாசம் கொள்ளச் செய்யும் வரை, முஸ்லிம்களாக மாறும்படி அவர்கள் கட்டாயப் படுத்தப்படக் கூடாது.


கிறிஸ்தவப் பெண்களை இஸ்லாத்தை ஏற்குமாறு முஹம்மதிய்யர்கள் நிர்ப்பந்திக்கலாகாது. எனினும் அவர்கள் தாமாகவே இஸ்லாத்தைத் தழுவ முன்வந்தால், முஹம்மதியர்கள் அவர்களை அன்பாக நடத்த வேண்டும்.


ஒரு முஹம்மதியரை திருமணம் செய்யும் கிறிஸ்தவப் பெண் இஸ்லாத்தை தழுவ விரும்பா விடில், அவளது மத நம்பிக்கைப்படி அவளது ஆலயத்தில் வழிபடுவதற்கு சுதந்திரம் உண்டு; அவளது கணவன் அவளுடன் மதத்தைக் காரணமாக வைத்து முறையீனமாக நடந்து கொள்ளக் கூடாது.


எவராவது இக்கட்டளைக்குப் பணிய மறுப்பாராயின், அவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்குமே பணிய மறுக்கிறார்; பெரும் குற்றமிழைத்தவராகவும் மாறுகிறார்.
நஸரேயர்கள் ஒரு தேவாலயத்தைக் கட்ட விரும்பினால் முஹம்மதிய அயலவர்கள் அவர்களுக்கு உதவ வேண்டும்; ஏனெனில் கிறிஸ்தவர்கள் எமக்கு கட்டுப்பட்டிருப்பவர்கள்; எம்மை நாடி வந்தவர்கள்; அமைதியையும் அன்பையும் வேண்டி நிற்பவர்கள்.


கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் கற்றறிந்த-மகத்தான மனிதர் ஒருவர் இருந்தால், முஹம்மதியர்கள் அவரது மாண்பு குறித்துப் பொறாமை கொள்ளாமல் மதிப்பளிக்க வேண்டும்.


கிறிஸ்தவர்களுடன் கனிவும் நியாயமும் இன்றி நடந்து கொள்பவர் அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டுப்படாத குற்றத்துக்கு ஆளாகி விடுவார்.


கிறிஸ்தவர்கள் இஸ்லாத்தின் எதிரிகளுக்குப் புகலிடம் வழங்கவோ, குதிரை அல்லது ஆயுதம் அல்லது வேறு வகையான உதவி எதனையும் வழங்கவோ கூடாது.


ஒரு முஹம்மதியருக்குத் தேவையேற்படும் பட்சத்தில், கிறிஸ்தவர்கள் மூன்று பகல்களும் மூன்று இரவுகளும் உபசாரம் வழங்குவதோடு, எதிரிகளிடமிருந்தும் அபயமளிக்க வேண்டும்.

மேலும், கிறிஸ்தவர்கள் முஹம்மதியப் பெண்களையும் சிறுவர்களையும் பாதுகாக்க வேண்டும்; அவர்களை எதிரிகளிடம் ஒப்படைக்கவோ, எதிரிகள்
காணும்படி வைத்திருக்கவோ கூடாது.

இந்நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க நஸரேயர்கள் தவறும் பட்சத்தில், பாதுகாக்கப்படுவதற்கான தங்கள் உரிமையை அவர்கள் இழப்பதோடு இந்த உடன்படிக்கையும் செல்லுபடியற்றதாகி விடும்.


இவ்வாவணம் பாதுகாத்து வைக்கப்படும் பொருட்டு கிறிஸ்தவ தலைவரிடமும் தேவாலய தலைமை தர்ம கர்த்தாவிடமும் ஒப்படைக்கப்பட வேண்டும்.


ஒப்பமிட்டோர்:
அபூ பக்கர் அஸ்-ஸித்தீக்; உமர் இப்னுல் கத்தாப்; உஸ்மான் பின் அப்பான்; அலீ பின் அபீ தாலிப்; முஆவியா பின் அபீ ஸுப்யான்; அபூ அல் தர்தா; அபூ தர்; அபூ பறாஹ்; அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்; அப்துல்லாஹ் பின் அப்பாஸ்; ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப்; ஃபழ்ல் பின் அப்பாஸ்; அஸ்-ஸுபைர் இப்னுல் அவ்வாம்; தல்ஹா பின் அப்தில்லாஹ்; ஸஅத் பின் முஆத்; ஸஅத் பின் உபாதா; தாபித் பின் கைஸ்; யஸீத் பின் தாபித்; அப்துல்லாஹ் பின் யஸீத்; ஸஹ்ல் பின் ஸுஃப்யா (அல்லது ஸிஃபா); உஸ்மான் பின் மழ்ஊன்; தாவூத் பின் ஜீபஹ்; அபுல் ஆலியா; அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல் காழீ; அபூ ஹுதைஃபா; இப்னு ஆஸிர்; பின் றபீஆ; அம்மார் பின் யாஸிர்; ஹாஷிம் பின் ஆஸியா; ஹஸ்ஸான் பின் தாபித்; கஅப் பின் கஅப்; கஅப் பின் மாலிக்; ஜஅஃபர் பின் அபீ தாலிப் (அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தி உண்டாவதாக!)


இவ்வுடன்படிக்கை ஹிஜ்ரி நான்காம் வருடத்தின் நான்காம் மாத நிறைவில் திங்களன்று இறைத்தூதர் முஹம்மத் கூற, முஆவியா பின் அபீ ஸுஃப்யானால் மதீனாவில் எழுதப்பட்டது.

ஒப்புதல்

தூதர் முஹம்மத்

உலக கிறிஸ்தவர்களுடன் செய்த உடன்படிக்கைகள்


இவ்விவரணம் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமுதாயங்களை ஐக்கியப்படுத்தும் சக்தியைக் கொண்டிருக்கிறது. அறிவார்ந்த இப்பணியின் வெளியீடு காலப் பொருத்தமுடையது. பரஸ்பர மரியாதையையும் மத சுதந்திரத்தையும் ஊக்குவிப்பதற்கான தீர்மானகரமான உள்ளடக்கத்தை இது கொண்டிருக்கிறது”.


இமாம் பைஸல் அப்துல் றஊப், தலைவர், கொர்டோபா முன்னெடுப்பு-


ஜோன் அன்ட்ரூ மோறோ இப்றாஹீமிய மதங்கள் பற்றிய ஆய்வுக்கான தனது பங்களிப்பில், முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் ஒன்றிணைப்பதற்கு தூதர் முஹம்மத் எவ்வாறு விருந்தோம்பல் மற்றும் பாதுகாப்பு வழங்குதல் மீதான தனது பாலைவன அனுபவத்தை பிரயோகித்தார் என்ற கதையை சொல்கிறார்”.


ஜோஸஃப் ஹாப்ஸ், மிஸூரி பல்கலைக்கழகம்-


உடன்பிறப்புகள் போன்று ஒன்றாகச் சேர்ந்து வாழ கற்றுக் கொள்வதா அல்லது முட்டாள்கள் போன்று ஒன்றாகச் செத்து மடிவதா என்பது பற்றி
முன்னெப்போதையும் விட அதிகமாக இன்று நாம் சிந்திக்கிறோம். தூதர் முஹம்மதினால் கிறிஸ்தவ சமூகங்களுக்காக எழுதப்பட்ட இக்கடிதங்கள்,
அல்லாஹ்வின் ஜனங்களாகவும், பரஸ்பர நண்பர்களாகவும், அயலவர்களாகவும், இச்சிறிய கிரகத்தின் காவலர்களாகவும் ஒன்றிணைந்து வாழ்வதற்கான உந்து சக்தியை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய நம் இரு சாராருக்கும் தரவல்லவை.

ஒமிட் சஃப்ல், வட கரோலினா பல்கலைக்கழகம்-


முஸ்லிம் உலகின் கலாசார, மத வரலாற்றிலும், இஸ்லாத்திற்கும் கிறிஸ்தவத்துக்கும் இடையிலான கலாசார உறவிலும் ஆர்வம் கொண்டிருப்போருக்கு தூதர் முஹம்மதின் உடன்படிக்கைகள்…’ பயன்மிக்க மூலாதாரமாகும். வேறுபட்ட நாகரிகங்களுக்கிடையிலான சகிப்புத் தன்மையையும், நல்லெண்ணத்தையும், சிறந்த புரிதலையும் பலப்படுத்த இது மிக உதவும்; மேலதிக ஆய்வுகளுக்கான புதிய திசைகளையும் திறந்து விடும்”.


அயிடா கஸிமோவா, பாகு மாநிலப் பல்கலைக்கழகம்-


இம்முன்னணிப் பணியில் பேராசிரியர் மோறோ முதலிட்டுள்ள கடும் உழைப்பின் மூலமும் அர்ப்பணத்தின் மூலமும் இஸ்லாமிய கற்கைகள் சார்ந்த மாணவர்களதும், வல்லுனர்களதும் கவனத்தை நிச்சயம் கவர்ந்திழுப்பார். உண்மையில் இந்நூல் கிறிஸ்தவம், யூதம், இஸ்லாம் ஆகிய மூன்று இப்றாஹீமிய வேத வெளிப்பாடு சார்ந்த மதங்களுக்கும் இடையிலான உறவை மீள்பரிசீலனை செய்வதற்கான உண்மையான அழைப்பாகும்”.


அமர் செல்லாம், முதலாம் முஹம்மத் பல்கலைக்கழகம்-


உலக கிறிஸ்தவர்களுடன் தூதர் முஹம்மத் செய்த உடன்படிக்கைகள் என்ற ஜோன் அன்ட்ரூ மோறோவின் நூலாக்கம் கவனத்தை ஈரக்குமொரு புதிர்.

கரேன் லெஸ்லீ ஹெர்னான்டெஸ், ஒன் இஸ்லாம்-


இவ்வொப்பந்தங்கள் முன்வைக்கும் தர அளவீடுகள் தூதரின் காலத்தில் மட்டுமன்றி நமது காலத்திலும் முன்னேற்றகரமானவையாகவே தோன்றுகின்றன”.


அன்னா மாரியா மார்டெலி, ஆபிரிக்க மற்றும் கிழக்கு தேசங்களுக்கான இத்தாலிய நிறுவனம்-


இந்நூலானது இஸ்லாத்தின் மூன்றாவது அடிப்படை மூலாதாரமாக இருக்கத் தக்கதான ஒன்றை ஆவணப்படுத்துகிறது: இப்றாஹீமிய மதங்களைப் பின்பற்றும் மக்களுக்கு மத்தியிலான இறைத்தூதரின் ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும் என்பதே அது. டாக்டர் மோறோ யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என்போருக்கிடையிலான அமைதியான சகவாழ்வுக்கு கட்டளையிடுகின்ற அசாதாரண முக்கியத்துவம் கொண்ட முடிவுகளை முன்கொண்டு வருகிறார். மட்டுமன்றி, தூதரும் அவரைப் பின்பற்றியோரும் கிறிஸ்தவர்களையும் யூதர்களையும் வெறும் சகிப்புத்தன்மை
என்ற நிலையை வெகுதூரம் தாண்டி எவ்வாறு கௌரவமாகவும் அக்கறையுடனும் நடத்தினார்கள் என்பதை ஒப்பிட்டு நோக்க உதவும் வகையில் பல மொழிபெயர்ப்புகளையும இதில் உள்ளடக்கியுள்ளார்”.


பிரிட்ஜெற் புளும்ஃபீல்ட், நெப்றாஸ்கா பல்கலைக்கழகம்-


இந்த உடன்படிக்கைகள் வெறும் வரலாற்று ஆவணங்களல்ல; ஆரம்பம் முதல் இறுதி வரையான அனைத்து முஸ்லிம்களையும் தொடர்ந்து கட்டுப் படுத்துபவை. டாக்டர் மோறோவின் பணி இஸ்லாமிய பொது சர்வதேச சட்டத்துக்கான புதிய அடிவானமொன்றைத் துலக்கியிருப்பதோடு, இவ்வுடன்படிக்கைகள் தொடர்பான அறிவார்ந்த விசாரணைகள் இன்னும் மேற்கொள்ளப்படுவதற்கும் ஊக்கமளித்துள்ளது”.


ஹிஷாம் எம். றமழான் எஸ். ஜே. டி., கிவன்ற்லென் பாலிடெக்னிக் பல்கலைக்கழகம்-


தூதர் முஹம்மதின் உடன்படிக்கைகள்…’ காலப் பொருத்தமும் கூர்மையும் கொண்டதோர் முன்னோடி ஆய்வு. தூதர் முஹம்மதின் சிந்தனைகளையும் கொள்கைகளையும் அது வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது”.


முஹம்மத் அல்-கோஷே, முதலாம் முஹம்மத் பல்கலைக்கழகம்-


இது குறிப்பிடத்தக்கதொரு புலமைத்துவப் பங்களிப்பு. தூதர் முஹம்மத் செய்த உடன்படிக்கைகளுக்கான இத்தொகுப்பு, தற்போது பரவலாகக் கிடைக்க
வழிசெய்யப் பட்டுள்ளது. இது அன்னாரது உரைகளின் பிரிக்க முடியாத கூறொன்றாக அமைகிறது; ஏனெனில், முஸ்லிமல்லாதோர் பற்றி குறிப்பாகவும், கிறிஸ்தவர்கள் பற்றி பிரதானமாகவும் இது கவனம் செலுத்துகிறது”.


முஹம்மத் ரிழா ஃபக்ர் ரூஹானி, கும் பல்கலைக்கழகம்-


கலந்துரையால் மற்றும் பரஸ்பரப் புரிந்துணர்வு என்பவற்றை வரவேற்கின்றதொரு மதம் பற்றிச் சிந்திக்குமாறு இஸ்லாத்தின் மீது ஆர்வம்
கொண்டுள்ள அனைத்து அறிஞர்களையும் டாக்டர் மோறோ தனது பாரம்பரிய அரபு மொழித் தேர்ச்சி கொண்டும், இஸ்லாமிய முதுசம் பற்றிய பன்முக அறிவு கொண்டும் வெளிப்படையாகவும் அச்சமின்றியும் அழைப்பு விடுக்கிறார். இஸ்லாம் பற்றிய உண்மை நிலையை அறிய அவாவுகின்ற திறந்த மனமுள்ள ஒவ்வொரு வாசகரின் புத்தக அலுமாரியில் இருக்க வேண்டியது இவரது நூல்”.


ஸஈத் மென்தக், முதலாம் முஹம்மத் பல்கலைக்கழகம்-


மார்டின் லூதர் கிங் தனது பிர்மிங்ஹாம் சிறையிலிருந்து ஒரு மடல்மூலமாக செய்ததை ஜோன் அன்ட்ரூ மோறோ இந்நூல் மூலமாக செய்திருக்கிறார்; மக்கள் தாங்கள் நம்பச் செய்யப்பட்டிருக்கும் நிலைப்பாட்டிலிருந்து விலகி நிற்குமாறு அழைக்கிறார்; ‘இதோ உள்ளன உடன்படிக்கைகள். இவற்றைப் படியுங்கள்; இவற்றுக்கு மதிப்பளியுங்கள்; தூதரின் நோக்கத்தை சங்கைப் படுத்துங்கள்!எனக் கூறுகிறார்”.


பர்பரா காஸ்லட்டன். அறபு மொழி, இஸ்லாம், அல்லாஹ் பற்றிய அகராதியின் இணை ஆசிரியர்-


அற்புதமானதோர் அறிவார்ந்த எழுத்தாக்கம்”.

க்றேக் கான்ஸிடைன்,ஹஃபிங்டன் போஸ்ட்-


சிந்தனைக்குரிய, எடுத்தாளத்தக்க, அறிவார்ந்த தூதர் முஹம்மத் உலக கிறிஸ்தவர்களுடன் செய்த ஒப்பந்தங்கள்என்ற இவ்வாக்கமானது மரியாதை,
சகிப்புத்தன்மை முதலிய கொள்கைகள் மீது கட்டமைந்த மார்க்கமாக இஸ்லாத்தைப் புரிந்து கொள்வதற்கான முக்கியமான சான்றை முன்வைக்கிறது”.


டான் வில்கின்ஸன், பதெயோஸ் (PATHEOS)-
உடன்படிக்கை முன்னெடுப்பு

தற்போது உலகை அழிவுக்குள் தள்ளிக் கொண்டிருக்கும்

காட்டுமிராண்டித் தனமான மோதல்களை எதிர்கொள்ளும் வகையில், “தூதர் முஹம்மத் உலகக் கிறிஸ்தவர்களுடன் செய்த உடன்படிக்கைகள்என்ற நூலின் வெளியீடு ஏற்படுத்தித் தந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி உடன்படிக்கை முன்னெடுப்புஒன்றைத் தொடங்கி


வைப்பதற்கு ஆர்வமுள்ள முஸ்லிம்கள் விரும்பினர்; அனைத்து சட்டவாக்க மற்றும் ஆன்மீகப் பள்ளிகளையும் சேர்ந்த, ஸுன்னீக்கள், ஷீஆக்கள்,
ஸுஃபீக்கள், அறிஞர்கள், அறிஞரல்லாதோர் முதலிய எல்லாத் தரப்பு முஸ்லிம்களும் தங்களது பெயர்களை பின்வரும் பிரகடனத்துடன் இணைக்க வேண்டும் என அம்முன்னெடுப்பு கேட்டுக் கொள்கிறது:


கீழே கையொப்பமிடும் நாங்கள், தூதர் முஹம்மத் (அன்னார் மீது சாந்தியும் அருளும் உண்டாவதாக!) உலகக் கிறிஸ்தவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் ஆன்மாவோடும் எழுத்துகளோடும் எம்மைப் பிணைத்துக் கொள்கிறோம்; இவ்வுடன்படிக்கைகள் நம்பகமானவை என ஏற்றுக் கொள்ளப்பட்டால், ஷரீஆவின் சட்ட பலத்தை அவை பெறும் என்ற புரிதல் எம்மிடம் உண்டு; ஷரீஆவிலுள்ள -பாரம்பரியமாகவும் சரியாகவும் வியாக்கியானம் செய்யப்பட்டுள்ள- எதுவும் இவற்றுடன் என்றுமே முரண்பட்டதில்லை என்பதையும் நாம் புரிந்திருக்கிறோம். இன்று உலகின் நாலா திக்கிலும் பரவிக் கிடக்கும் பயம், நாத்திகம், கடும்போக்கு மதச்சார்பின்மை, போலி மதபக்தி என்பவற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் என்றவகையில் முஸ்லிம்களாகிய நாம் அனுபவிக்கும் துன்பத்தினூடாக கிறிஸ்தவர்களாகிய உங்களது துன்பத்தையும் புரிந்து கொள்கிறோம்; அவ்வாறான உங்களது துன்பம் பற்றி ஆழ்ந்து சிந்திப்பதனூடாக எங்களது துன்பம் பற்றிய ஆழ்ந்த பிரக்ஞையும் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. கருணையாளர்களுக்கெல்லாம் மேலான கருணையாளன் நல்லவர்களதும் அப்பாவி மக்களதும் துன்பங்களைத் துடைப்பானாக! இறைத்தூதர் முஹம்மத் கிறிஸ்தவர்களுடன் செய்த உடன்படிக்கையின் ஆன்மாவையும் வார்த்தைகளையும் அவர்களுடனான எமது அனைத்து நடவடிக்கைகளிலும் -அவனது நாட்டத்துக்கு முற்றாக பணிந்த நிலையில்- பின்பற்றுவதற்கு ஆற்றல் தருவானாக! அளவற்ற அன்பும் நிகரற்ற அருளும் நிறைந்த அல்லாஹ்வின் பெயரால் (இதனைக் கேட்கிறோம்). சர்வ புகழும் அகிலங்களை ரட்சித்துப் போஷிக்கும் அல்லாஹ்வுக்கே உரியது!


இப்பிரகடனத்தையும், எமக்குக் கிடைக்கப் பெறுகின்ற ஒப்புதல் குறிப்புகளையும் தூதர் முஹம்மத் உலகக் கிறிஸ்தவர்களுடன் செய்த உடன்படிக்கைகளுடன் சேர்த்து மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் உலகின் வேறு பல பாகங்களிலும் உள்ள கிறிஸ்தவத் தலைவர்களுக்கு அனுப்பி வைப்போம்; அவர்களில் பலரது சமூகங்கள் இன்று முஸ்லிம் கடும் போக்காளர்களது தீவிரத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. கடந்த காலத்தில் இஸ்லாத்தின் பெயரால் இழைக்கப்பட்ட குண்டுத் தாக்குதல்களையும் கொடூரப் படுகொலைகளையும் எதிர்காலத்தில் நிகழச் சாத்தியமான அவலங்களையும் (அவ்வாறு நிகழ்ந்து
விடாமல் அல்லாஹ் தடுப்பானாக!) கவனத்தில் கொள்ளும் போது நாம் இவ்வாறு கூறுதல் மிகத் தகும்: மேற்கு நாடுகளில் வாழும் முஸ்லிமல்லாத மக்கள் திரளின் மனதில் இஸ்லாமியப் பயங்கரவாதமானது முழு இஸ்லாமுமாக அடையாளப்படுத்தப்படுவதை தடுப்பதற்கு முஸ்லிம்கள் எதையாவது செய்தேயாக வேண்டும் என்ற கால சூழநிலை வரலாற்றில் எப்போதாவது காணப்பட்டிருக்குமாயின், அது தற்காலமாகத்தான் இருக்கும். கடந்த இருநூறு ஆண்டுகளாக மேற்குலகுடனான எல்லாத் தொடர்புகளிலும் ஏறக்குறைய இஸ்லாமே தோற்கும் தரப்பாக இருந்து வந்திருக்கிறது; மட்டுமன்றி இன்று அது உள்ளும் புறமுமாக தயவு தாட்சண்யமற்ற தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.

அப்படியாயின், சமகாலக் கிறிஸ்தவர்களது துயரங்கள் குறித்த பொதுக் கவனத்தை முஸ்லிம்கள் ஈர்க்க வேண்டிய அவசியம்தான் என்ன?!

பெருமளவு இரங்கத் தகு நிலையில் இருப்பவர்கள் தம் போன்று துன்பப்படும் பிறர் மீது இரக்கம் காட்டுவதானது ஒரு சக்தி வாய்ந்த, தீரம் மிக்க செயலாக இருக்கும் என்பது இதற்கு ஒரு காரணமாகும். கோரிக்கைகளோடு வருபவர்கள் தங்களை விட்டு மக்களை தூரமாக்கிக் கொள்கின்றனர்; உதவி கொண்டு வருபவர்களே அவர்களை தம் பக்கம் ஈர்த்துக் கொள்கின்றனர்.

ஆனால் நாங்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் இல்லை!என வெறுமனே கண்டனப் பேரணி நடாத்தும் நிலைக்கு அப்பால் முஸ்லிம்கள் நகர வேண்டிய நேரம் இது; ஏனெனில் இத்தகைய வாசகம் -முற்றிலும் தெளிவான உண்மையாக இருந்தாலும்- முஸ்லிமல்லாத பலரைப் பொறுத்தவரை (அவர்கள் நம்பினாலும் நம்பா விட்டாலும்) அது ஒரு தற்காப்பு வளையம் மட்டுமே. எனவே, இன்று மிகத் தவறாக வழிநடாத்தப் படுகின்ற சில முஸ்லிம்களால்தாக்கப்படுகின்ற அமைதி வழிக் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலான தீவிரமான, உயிர்ப்புள்ள பொது நிலைப்பாடொன்றை முஸ்லிம்கள் எடுக்க வேண்டும்; இறைத்தூதர் முஹம்மதின் நேரடி வார்த்தைகளைக் கொண்ட -புதிதாக கண்டெடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில்- அன்னாரின் பெயர் கொண்டே இதனை அவர்கள் செய்ய வேண்டும் (அன்னார் மீது சாந்தியும் அருளும் உண்டாவதாக!).


அல்லாஹ்வின் உதவியால், இத்திட்டம் மூன்று நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்; முக்கியத்துவ அடிப்படையில் அவற்றை இவ்வாறு நாம் ஏறு வரிசைப்படுத்த முடியும்:

1. முஸ்லிம்களைப் பற்றிய சாதகமான அபிப்பிராயம் ஒன்றை இன்னும் மானிட உணர் திறனுடன் வாழ்ந்து கொண்டிருப்போருக்கு வழங்குதல்.

2. சில உயிர்களையாவது காப்பாற்ற முடிதல்.

3. அல்லாஹ் தனது தூதர் முஹம்மத் (அன்னார் மீது சாந்தியும் அருளும் உண்டாவதாக!) மூலமாக அனுப்பிய தெளிவான கட்டளைக்கேற்ப செயல்படுவது அவனது
பார்வையில் பெறுமதி மிக்க விடயமாக இருத்தல்.


சமாதானம் என்பது சமாதான உணர்வுகளை ஏற்படுத்திக் கொள்வதனாலோ, பிரத்தியேக சமாதானக் கூட்டங்களுக்கு பிரசன்னமாவதனாலோ ஈட்டப்படுவதில்லை; எப்போதும் இறைநினைவுடன் நின்று, பிரச்சினைக்கு முகம் கொடுப்பதாலும் தொடர்ச்சியாக தாக்குப் பிடிப்பதாலுமே அது எட்டப்படுகிறது. மூலோபாய நலனும், தார்மீக நேர்மையும், தெய்வீகக் கட்டளையும் தெளிவாகக் குவிந்து ஒரு குறித்த செயற்பாட்டை நோக்கி நெம்புதல் என்பது மிக அரிதானதொரு நிகழ்வு; இந்த உடன்படிக்கை முன்னெடுப்பானது அத்தகையதொரு குவிவைப் பிரதிநிதித்துவம் செய்கிறது என நம்புகிறோம். நீங்கள் ஒரு முஸ்லிமாக இருந்தால் தூதர் முஹம்மத் உலகக் கிறிஸ்தவர்களுடன் செய்த உடன்படிக்கைகளை வாசித்த பிறகு, உங்கள் மனச்சாட்சிப் பிரகாரம் இம்முன்னெடுப்பில் உங்கள் பெயரையும் தாரளமாக இணைக்கலாம். உங்களுக்காக வேறு யாரும் தீர்மானம் செய்ய முடியாது என்பதையும், எவ்வகையிலும் உங்களை நிர்ப்பந்திக்க முடியாது என்பதையும் மனங் கொள்க; சன்மார்க்க விவகாரத்தில் எவருக்குமே நிர்ப்பந்தம் இல்லை’. http://www.covenantsoftheprophet.org


[1] அஸ்ஸெய்யித் அல்கஸ்ஸானீ